செய்திகள்

திருடிய பணத்தை பங்கு வைப்பதில் தகராறு- கொள்ளையனை வெட்டிக் கொன்ற கூட்டாளிகள்

Published On 2018-09-25 13:54 GMT   |   Update On 2018-09-25 13:54 GMT
வேப்பூரில் திருடிய பணத்தை பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளிகளே கொள்ளையனை வெட்டிக் கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:

சிவகங்கை மாவட்டம் ஒட்டக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 35).

இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை மிரட்டி தனது கூட்டாளிகளுடன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ராஜமாணிக்கம் மற்றும் அவரது கூட்டாளிகள் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டனர். பின்னர் கொள்ளையடித்த பணத்தோடு வேப்பூர் பகுதிக்கு வந்தனர். அங்கு வைத்து பணத்தை பங்குவைத்து கொண்டிருந்தனர்.

அப்போது ராஜமாணிக்கத்துக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் இடையே பணத்தை பிரிப்பதில் திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ராஜமாணிக்கத்தை அவரது கூட்டாளிகள் தாக்கினர். பின்னர் அரிவாளால் ராஜமாணிக்கத்தை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜமாணிக்கம் மயங்கி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை வேப்பூர் வனப்பகுதி அருகே போட்டுவிட்டு அங்கிருந்து அவரது கூட்டாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜமாணிக்கத்தை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு ராஜமாணிக்கம் இறந்தார்.

கொலை சம்பவம் குறித்து ராஜமாணிக்கத்தின் தாய் ஜெயா வேப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராஜமாணிக்கத்தை கொலை செய்த அவரது கூட்டாளிகள் யார்? அவர்கள் எங்கெல்லாம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டனர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள ராஜமாணிக்கத்தின் கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News