செய்திகள்

கருணாஸ் பின்னணியில் இருப்பது யார்?- போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு

Published On 2018-09-25 06:01 GMT   |   Update On 2018-09-25 06:01 GMT
தனது ஆதரவாளர்கள் அருந்தும் மதுவுக்கு மட்டும் தினமும் ரூ.1 லட்சம் செலவு செய்வதாக கருணாஸ் கூறியிருப்பதால் அவரது பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #Karunas
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் கருணாஸ், கடந்த 16-ந்தேதி நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இது தொடர்பான வீடியோ பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. துணை கமி‌ஷனர் அரவிந்தன் தனது சட்டையை கழற்றி விட்டு என்னோடு நேருக்கு நேர் மோதுவதற்கு தயாரா? என்று கேள்வி எழுப்பிய கருணாஸ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே என்னை பார்த்து பயப்படுகிறார் என்றும் கூறினார்.

நாடார் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலும் அவரது பேச்சுக்கள் அமைந்திருந்தன. முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்தவர்கள் கொலை செய்யவும் தயங்கக்கூடாது. பிக்னிக் செல்வது போல ஜெயிலுக்கு சென்று வாருங்கள். வழக்கு செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். மதுவுக்காக மட்டுமே ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவாகிறது என்றும் பேசினார்.

இதனை தொடர்ந்தே நேற்று முன்தினம் அதிகாலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், அடுத்த சில மணி நேரங்களிலேயே வேலூர் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். பாதுகாப்பு காரணங்களால் அவர் இடமாற்றம் செய்யபட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இதன்படி எழும்பூர் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிடுவார். இதன் பின்னர் குறிப்பிட்ட நாளில் கோர்ட்டில் ஆஜராகும் அவரை போலீசார் காவலில் எடுக்க உள்ளனர்.


கருணாஸ் பேசிய பேச்சுக்களை அடிப்படையாக வைத்தே போலீஸ் காவலில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. கருணாஸ் தனது பேச்சில் தினமும் மதுவுக்காக ரூ.1 லட்சம் செலவு செய்வதாக கூறியுள்ளார். இந்த பணம் எப்படி வருகிறது? எந்த அடிப்படையில் யாருக்கெல்லாம் செலவு செய்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை போலீசார் கேட்க உள்ளனர்.

தி.நகர் துணை கமி‌ஷனராக இருக்கும் அரவிந்தன் பற்றி கருணாஸ் பேசியதும் கடும் விவாதப் பொருளானது. எதற்காக கருணாஸ் அப்படி பேசினார்? அவருடன் அப்படி என்ன பிரச்சனை? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இது தொடர்பாகவும் போலீஸ் காவலில் கருணாசிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. அதே நேரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும் விளக்கம் கேட்கப்படுகிறது.

கருணாஸ் பேசிய பேச்சுக்கள், அவராகவே பேசியதா? என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

கருணாசின் அமைப்பான முக்குலத்தோர் புலிப்படையில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் தாமோதர கிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றியும் கருணாசிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கருணாசை காவலில் எடுக்கும் போது, தாமோதர கிருஷ்ணன் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். #Karunas

Tags:    

Similar News