செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசின் ஏஜெண்டு- தினகரன் தாக்கு

Published On 2018-09-22 10:10 GMT   |   Update On 2018-09-22 10:10 GMT
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசின் ஏஜெண்டு என்று தாராபுரத்தில் டிடிவி தினகரன் பேசினார். #dinakaran #opanneerselvam #CentralGovernment

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தாராபும் தொகுதிக்கு உட்பட்ட தளவாய் பட்டினத்தில் திறந்த வேனில் அவர் பேசியதாவது:-

தமிழக மக்களின் நலன் காக்க மத்திய அரசை எதிர்க்கவும் சற்றும் யோசிக்காதவர் ஜெயலலிதா. 2016-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பா. ஜனதா அலை வீசிய போதும் தமிழகத்தில் அம்மாவிற்கு 37 எம்.பி.க்களை வெற்றி பெறச்செய்தவர்கள் நம்தமிழக மக்கள். தமிழக நலனுக்கு எதிரான மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவைகளை எதிர்த்தவர் அம்மா. ஆனால் எட்டு வழிச்சாலை விவசாயிகளை பாதிக்கும் என தெரிந்தும் அதை எதிர்க்க துணிவில்லாமல் மோடி அரசின் ஏஜெண்டாக இந்த அரசு செயல்படுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பன்னீர்செல்வம் மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்பட்டதால் பொதுச் செயலாளர் சசிகலாவால் அப்புறப்படுத்தப்பட்டார்.

சசிகலாவால் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டு உண்ட வீட்டிற்கு துரோகம் செய்துள்ளார். 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிக்க வைத்து முதல்வர் ஆனாரா? கொங்கு மண்டலம் எப்போதும் நமக்கு ஆதரவு தரும் பகுதியாகும் 90 சதவீத தொண்டர்கள் நம்முடன் உள்ளனர்.


ஆர்.கே. நகரில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளை கீழே தள்ளி விட்டு அமோக வெற்றி பெற்றோம். அதனைப் போல திருவாரூர், திருப்பரங்குன்றத்திலும் குக்கர் சின்னம் அமோக வெற்றி பெறும். தமிழக அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தவிக்கின்றனர். கோர்ட்டில் தண்டனை பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகவேல், மாவட்ட அவைத்தலைவர் நரேந்திரன், மாநில வழக்கறிஞர் அணி துணை பொது செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலாராணி உட்பட ஏராளமானேர் கலந்து கொண்டனர். #dinakaran #opanneerselvam #CentralGovernment

Tags:    

Similar News