செய்திகள்

அம்பை அருகே கேரள கழிவுகளை கொட்டிய‌ 2 லோடு ஆட்டோக்கள் பறிமுதல்

Published On 2018-09-21 10:32 GMT   |   Update On 2018-09-21 10:32 GMT
அம்பை அருகே கேரள கழிவு பொருட்களை கொட்டிய 2 லோடு ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார் தோட்ட உரிமையாளர், டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கை:

கேரளாவில் இருந்து சிலர் கழிவு பொருட்களை லாரி மற்றும் வாகனங்களில் ஏற்றிவந்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டுவதாக போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ண‌ம் உள்ள‌ன. இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் அம்பை அருகே உள்ள மன்னார் கோவில் பகுதியில் சாலை ஓரமாக இரு லோடு ஆட்டோக்களில் கேரள கழிவு பொருட்களை கொட்டினர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இது தொடர்பாக அம்பை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லோடு ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கேரள மாநில பலராமபுரம் என்ற பகுதியில் இருந்து இந்த கழிவு பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அப்பகுதியை சேர்ந்த சுல்பிகான் என்பவருக்கு சொந்தமாக‌ மன்னார்கோவில் அருகே தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்கு உரம் கொண்டுவருவது போன்று கழிவுகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.



இந்த ஆட்டோவை டிரைவர் யாசின் சதிகர் என்பவர் ஓட்டிவந்துள்ளார். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற கேரள கழிவுகளை கொட்டும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் குறையும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ள‌னர். #tamilnews
Tags:    

Similar News