செய்திகள்

தேர்தல் களம் காண்போம், வெற்றியை குவிப்போம்- முக ஸ்டாலின் அறிக்கை

Published On 2018-09-17 12:26 IST   |   Update On 2018-09-17 12:26:00 IST
நாளை நடக்கும் அறப்போராட்டத்தில் தேர்தல் களம் காண்போம், வெற்றியை குவிப்போம் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #mkstalin #dmk

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக மக்கள் கழகத்தைப் பார்க்கும் நிலையில், கழகத் தலைவர் என்ற முறையில் உடன்பிறப்புகளாகிய உங்களை நான் பார்க்கிறேன். களம் அழைக்கிறது; ஜனநாயக முறையிலான தேர்தல் களம். அதற்கு முன்பாக அமைதியாக நாம் பங்கேற்கிற அறப்போராட்டக் களம். ஆம் செப்டம்பர் 18! தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் அறப்போர்!

ஊழலில் புற்றுநோயெனப் புரையோடிப் போயிருக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான, மாபெரும் அறப் போராட்டக்களம். கழக உடன் பிறப்புகளின் பெருந்திரள் பங்கேற்பினாலும் விண்ணதிரும் லட்சிய முழக்கங்களாலும், கோட்டையில் இருப்பவர்கள் குலை நடுங்கப் போகும் போராட்டம்! அந்த ஊழல் பேர்வழிகளை கையால் அரவணைத்து அடிமையாக்கி, மாநில உரிமைகளை காலால் நசுக்குகின்ற மத்திய மதவெறி பாசிச ஆட்சியாளர்களுக்கு, தீர்மானமான எச்சரிக்கை விடுக்கும் போராட்டம்!

தலைவர் கலைஞர் அந்நாள்களில் மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்த போது வாழ்ந்த ஊரான சேலத்தில், உங்களில் ஒருவனான நான் பங்கேற்கிறேன். கழக முன்னோடிகள் பல்வேறு மாவட்டங்களிலும் தலைமை தாங்கி நடத்துகிறார்கள்.

செப்டம்பர் 18, கழக வரலாற்றில் சிறப்புமிக்க நாள். தனது தலைவரான தந்தை பெரியாரிடமிருந்து விலகினாலும், அவரது பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் நாள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் பேரறிஞர் அண்ணா. ஒரே கொள்கையுடன், இரட்டைக் குழல் துப்பாக்கியாக இரு இயக்கங்களும் இனப்பகைக்கு எதிராக நின்ற வரலாறு திராவிட இயக்கத்திற்கு உண்டு.

திராவிட முன்னேற்றக் கழகம் சென்னை மண்ணடி பவழக்காரத் தெருவில் உள்ள இல்லத்தில் 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் தொடங்கப்பட்ட நிலையில், அதற்கு மறுநாள் செப்டம்பர் 18-ம் நாள் அன்றுதான் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வ பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கொட்டும் மழையில் திரண்டிருந்த தோழர்களிடையே தி.மு.கழகத்தை அறிமுகப்படுத்தி அற்புத உரையாற்றினார் பேரறிஞர் அண்ணா.

அந்த வரலாற்று நினைவுகளுடன், விழுப்புரத்தில் முப்பெரும் விழாவைச் சிறப்பாக நடத்தித் தந்தமைக்காக மாவட்டக் கழக நிர்வாகிகள் தொடங்கி ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் என் இதயத்தில் மலரெடுத்து நன்றி மாலை தொடுக்கிறேன். முப்பெரும் விழா சிறக்கக் கண்டோம். இனி முப்போதும் வெற்றி காண்போம்.

அதனால், எப்போதும் நம் பணி ஓய்வதில்லை என்ற உணர்வுடன், கழகம் தோன்றிய நாளான செப்டம்பர் 17-ம் நாளில், நம் கண் போன்ற இயக்கத்தைக் கட்டிக் காப்போம் எனத் தலைவர் கலைஞரின் மீது உறுதியேற்று, செப்டம்பர் 18-ம் நாள் நடைபெறும் அறப்போர்க் களத்திற்கு ஆயத்தமாவோம்! வீணர்களின் ஆட்சியை வீழ்த்திட வீறுகொண்டு களம் புகுவோம்! வெற்றி இலக்கினை நோக்கி விரைந்து செல்வோம்! நாட்டைப் பிடித்திருக்கும் பிணி போக்கிட அணி அணியாய் நடைபோடுவோம்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags:    

Similar News