செய்திகள்

பஸ்சில் சென்ற முதியவரிடம் 10 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2018-09-13 23:02 IST   |   Update On 2018-09-13 23:02:00 IST
அரசு பஸ்சில் சென்ற முதியவரிடம் 10 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆர்.வேலூரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 74). இவருடைய மகன் கோவை பீளமேட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துரைராஜ் தனது மகனிடம் இருந்து 10 பவுன் நகையை வாங்கிச்சென்று, உடுமலையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்தார். பின்னர் அந்த நகையை சில நாட்களுக்கு முன்பு திருப்பினார். அதை பீளமேட்டில் வசித்து வரும் தனது மகனிடம் கொடுக்க முடிவு செய்தார். இதற்காக துரைராஜ் நேற்று முன்தினம் காலையில் உடுமலையில் இருந்து அரசு பஸ் மூலம் கோவை உக்கடம் வந்தார். 10 பவுன் நகையை ஒரு சிறிய பைக்குள் மறைத்து தான் அணிந்திருந்த ஆடைக்குள் வைத்திருந்தார்.

உக்கடம் வந்த அவர் அங்கிருந்து மற்றொரு அரசு பஸ்சில் ஏறி, பீளமேடு சென்றார். பின்னர் அவர் பீளமேடு பஸ் நிறுத்தத்தில் இறங்கியதும், தான் வைத்திருந்த நகையை பார்த்தபோது அதை காணவில்லை. பஸ்சில் வந்தபோது மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

அந்த நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து துரைராஜ் பீளமேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் துரைராஜிடம் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறும்போது, ‘பொதுவாக பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி முதியவர் கள் மற்றும் பெண்களிடம் நகை, பணம் திருடும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது. எனவே பஸ்சில் செல்லும்போது பணம், நகை கொண்டு செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்’ என்றனர். 
Tags:    

Similar News