செய்திகள்

காசிமேட்டில் மீன் ஏற்றுமதி குடோன் எரிந்து சாம்பல்

Published On 2018-09-13 15:56 IST   |   Update On 2018-09-13 15:56:00 IST
காசிமேட்டில் இன்று காலை மீன் ஏற்றுமதி குடோன் எரிந்து சாம்பல் ஆனது. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்கள் எரிந்து நாசமாகின.

ராயபுரம்:

காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் கம்பெனி உள்ளது. இதன் அருகே மீன்களை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது.

இங்கு ஏற்றுமதி செய்வதற்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள திருகை மீன்களை சேமித்து வைத்து இருந்தார். இதன் அருகே ஏற்றுமதி கம்பெனியின் அலுவலகம் உள்ளது.

இன்று காலை 8 மணியளவில் இந்த குடோன் தீப்பிடித்து எரிந்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.5 லட்சம் மீன்கள் எரிந்து நாசமாகின. அலுவலகமும் எரிந்தது. இங்கு இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் சேதமாகின.

காசிமேடு மீன்பிடி துறை முகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News