'உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்...' அந்தர்பல்டி அடித்த கானா நாட்டு தீர்க்கத்தரிசி!
- வரவிருக்கும் பேரழிவு குறித்து எச்சரிப்பதாக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம். அதாவது 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்கு பிறகு இந்த வார்த்தையை ஒவ்வொரு வருடமும் கேட்டுக்கொண்டு, கடந்து கொண்டு வருகிறோம்.
அதேபோல் மழை, வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை ஒவ்வொரு ஆண்டும் கடந்து வந்து கொண்டு இருக்கிறோம். இதுதொடர்பாக பலர் கணித்தும் வருகின்றனர். அவை பெரும்பாலும் நடைபெறுவது இல்லை.
இந்த நிலையில், தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக்கொண்டு உலகம் அழியப்போவதாக சொன்னவர், தற்போது உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் என்று கூறியுள்ளது இணையதத்தில் பேசு பொருளாகி உள்ளது.
கானா நாட்டைச் சேர்ந்த 30 வயதான எபோ நோவா என்ற நபர் தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக்கொள்கிறார். அவர் சாக்கு உடை அணிந்து கொண்டு மக்களுக்காக உண்ணாவிரதம், பிரார்த்தனை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு வரவிருக்கும் பேரழிவு குறித்து எச்சரிப்பதாக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வீடியோவில், 2025 டிசம்பர் 25-ந்தேதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் அழியப்போகிறது.
உலகம் அழியும்போது மக்களைக் காப்பாற்ற கடவுளின் உத்தரவின் பேரில், பைபிளில் வருவது போல 8 பெரிய கப்பல்களை (பேழைகளை) கட்டி வருவதாக கூறினார். இவரது பேச்சைக் கேட்ட மக்கள் அதை நம்பி, பேழைகளைக் கட்டுவதற்கு பலர் தங்கள் உடைமைகளை விற்று பணத்தை அவருக்குக் கொடுத்துள்ளனர். மேலும் அந்த பேழையில் இடம் பிடிக்க அவரை தேடிச் செல்லவும் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தான், தன்னை தீர்க்கத்தரிசி என்று கூறிய எபோ நபோ திடீரென தனது பேச்சை மாற்றிக்கொண்டுள்ளார். அதாவது, அவர் கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால், அதனை ஏற்றுக்கொண்ட கடவுள் உலக அழிவை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.