செய்திகள்

முக்கொம்பு மேலணை மதகு உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம் - வைகோ

Published On 2018-08-24 07:40 GMT   |   Update On 2018-08-24 07:40 GMT
முக்கொம்பு மேலணை மதகு உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MukkombuDam #Vaiko

கும்பகோணம்:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கும்பகோணத்தில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-

தமிழக அரசு நீர் மேலாண்மை கடமையை முறையாக செய்யவில்லை. மேலும் தொடர்ந்து நடந்த ஆற்று மணல் கொள்ளையாலும் பராமரிப்பு பணிகளை சரிவர செய்யாததாலும், 182 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்து விட்டன. இதற்கு தமிழக அரசின் பொறுப்பற்ற போக்கு தான் காரணம்.

கடந்த 2014-ம் ஆண்டில் கொள்ளிடத்தில் ரூ.410 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்படும் என்று அப்போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.


குதிரை ஓடிய பிறகு லாயத்தை கட்டி என்ன பயன்? அதுபோல் தான் முக்கொம்பு மேலணை உடைந்த பிறகு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என கூறுவது சரியில்லை.

அணையில் ஓட்டை விழுந்துள்ளது என தகவல் வந்த போதே அதை முறையாக பராமரிப்பு பணி செய்திருந்தால் உடைப்பு ஏற்பட்டு இருக்காது.

நமது முன்னோர்கள் சேமித்த இயற்கை வளம் மணல். மணலை கொள்ளையடித்தால் எதிர்க்கால சந்ததியினரின் வாழ்க்கையில் சீரழிவு ஏற்படும். முக்கொம்பு மேலணை உடைப்புக்கு மணல் கொள்ளைதான் காரணம்.

இவ்வாறு வைகோ கூறினார்.

Tags:    

Similar News