செய்திகள்

காவிரி நீர் கடலில் சென்று கலப்பது வேதனை அளிக்கிறது- இல.கணேசன்

Published On 2018-08-18 04:37 GMT   |   Update On 2018-08-18 04:37 GMT
காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வருவது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், அந்த தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படாமல் கடலில் கலப்பது வேதனை அளிப்பதாக இல.கணேசன் கூறினார். #BJP #LaGanesan
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ‘ஒரே நாடு, வெள்ளி விழா ஆண்டு’ என்ற பிரசார ஊர்தி பிரசாரத்தை பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பாரத நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதலீடு செய்ய தகுதியுடைய நாடுகளின் பட்டியலில் 146-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 100-வது இடத்துக்கு வந்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்துவிடும்.

மோடி ஆட்சியில் லஞ்ச லாவண்யங்கள் குறைந்துள்ளன. ப.சிதம்பரம் போன்றோர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே ப.சிதம்பரம் போன்று பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இந்த ஆட்சி குறித்த பாராட்டுக்களை எதிர்பார்க்க முடியாது.


ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்படும் போது சில மாநிலங்கள் அமுல்படுத்த மறுப்பு தெரிவித்தன. அதனால் டாஸ்மாக், பெட்ரோலிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து பெட்ரோல், டீசல் விலை விரைவில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டு வரப்படும்.

கர்நாடகத்தில் ஆண்டவனின் கருணையால் பெய்து வரும் மழையால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வருவது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், அந்த தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படாமல் கடலில் கலப்பது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கோவி.சேதுராமன், மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில்.பாலு, நகர தலைவர் மோடி.கண்ணன், சங்கரன் ஆகியோர் உடன் இருந்தனர். #CauveryWater #BJP #LaGanesan
Tags:    

Similar News