செய்திகள்

கருணாநிதி உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

Published On 2018-08-17 20:54 GMT   |   Update On 2018-08-17 20:54 GMT
மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #Karunanidhi
சென்னை:

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க தி.மு.க. சார்பில் தமிழக அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், சட்ட சிக்கல் காரணமாக கருணாநிதிக்கு கிண்டி காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும், மெரினாவில் இடம் அளிக்க முடியாது என்றும் தமிழக அரசு திட்ட வட்டமாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு மேல் முறையீட்டுக்கு செல்லாமல், அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுத்தது. அந்த இடத்தில் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இந்த தகவலை தி.மு.க. வக்கீல் ஒருவரும் உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறும்போது, ‘மெரினா கடற்கரை அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதை என்னிடம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்’ என்றார். #Karunanidhi
Tags:    

Similar News