செய்திகள்

திருமங்கலத்தில் முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை பறிப்பு

Published On 2018-08-10 10:30 GMT   |   Update On 2018-08-10 10:30 GMT
காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள முகமேதாபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன். இவர் அரசு கருவூலத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி வீரம்மாள் (வயது 60). இவர் நேற்று இரவு அங்குள்ள ஒரு கடைக்கு காய்கறி வாங்கச் சென்றார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வீரம்மாளிடம் முகவரி கேட்பது போல் ஒரு பேப்பரை காட்டினர்.

அதனை வீரம்மாள் வாங்கி படித்துப்பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் சீட்டில் இருந்த நபர் வீரம்மாளின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார்.

வீரம்மாள் ‘திருடன், திருடன்’ என்று அலறினார். இதனை கேட்ட பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

இது தொடர்பாக வீரம்மாள், திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை வலைவீசி தேடிவவருகிறார்.

Tags:    

Similar News