செய்திகள்

கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் 43 தி.மு.க. தொண்டர்கள் மரணம்

Published On 2018-08-10 05:16 GMT   |   Update On 2018-08-10 05:16 GMT
தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் இதுவரை 43 தொண்டர்கள் மரணம் அடைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.#DMKLeader #Karunanidhi
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.

அவரது மரணம் தி.மு.க. தொண்டர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது.

கருணாநிதி கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே அதிர்ச்சியில் பலர் உயிர் இழந்துள்ளனர்.

பெரம்பூர் 46-வது வட்டத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டர் பரசுராமன் தலைவர் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் மாரடைப்பில் இறந்து விட்டார்.

முகலிவாக்கம் 156-வது வட்டத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவர் அதிர்ச்சியில் இறந்து விட்டார்.

அம்பத்தூர் பகுதி 84-வது வட்ட துணை செயலாளரான கொரட்டூரை சேர்ந்த குமரன் என்பவர் துக்கம் தாங்காமல் தீக்குளித்து இறந்தார்.

அணைக்கட்டு தொகுதி தொரப்பாடி அரியூர் காந்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் டி.வி.யில் கருணாநிதி கவலைக்கிடம் என்ற செய்தியை பார்த்து கொண்டிருந்த போதே மாரடைப்பால் இறந்து விட்டார்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி 7-வது வட்ட துணை செயலாளர் புஷ்பராஜின் தந்தை கோபன் என்ற மனோகரன் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

மதுரை ரிசர்வ் லையன் காலங்கரையை சேர்ந்த அழகு ராஜா (27), தி.மு.க. இளைஞரணி உறுப்பினரான இவர் கருணாநிதியின் மரண செய்தியை டி.வி.யில் பார்த்த போது அதிர்ச்சியில் இறந்து விட்டார்.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வீடு திரும்பிய மயிலை ஜெகதீஸ் கார்த்திக் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

கருணாநிதியின் உடலை சந்தன பெட்டியில் வைத்து குழிக்குள் இறக்கிய போது டி.வி.யில் செய்தி பார்த்து கொண்டிருந்த குன்றத்தூர் ஒன்றிய கழக நிர்வாகி அருணாசலம் அதிர்ச்சியில் இறந்து விட்டார்.

இது தவிர கருணாநிதியின் உடலை ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைத்திருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிர் இழந்து விட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்ததில் இதுவரை 43 தி.மு.க.வினர் மரணம் அடைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
Tags:    

Similar News