செய்திகள்

உயிரை இழக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2018-08-01 07:58 GMT   |   Update On 2018-08-01 07:58 GMT
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதால் தொண்டர்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.#MKStalin #DMKCadres #Karunanidhi
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒவ்வொரு உடன் பிறப்பின் உயிர் மூச்சாகத் திகழும் கழகத் தலைவர் கலைஞர் உடல்நலிவுற்றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் 21 கழகத் தோழர்கள் இறந்துள்ளார்கள் என்ற செய்தி அறிந்து மனஅழுத்தத்தில் உறைந்து போயிருக்கிறேன். தலைவர் கலைஞரின் உடல் நலக்குறைவால் ஏற்பட்டுள்ள சோகத்துடன், உடன் பிறப்புகள் இறந்துள்ளார்கள் என்ற செய்தி என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உயிரிழந்த உடன் பிறப்புகளின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவேரி மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல், தலைவர் கலைஞரின் உடல் நிலை சீராகி வருகிறது. தலைவர் கலைஞருக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு தொடர்ந்து காவேரி மருத்துமனையில் சிகிச்சை அளித்து, தலைவர் அவர்களது உடல் நிலையை கண் அயராது கண்காணித்து வருகிறது. கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டே “தலைவா வா” என்று எழுப்பிய அந்த உயிர்த்துடிப்பான உணர்ச்சி மிகு முழக்கங்கள் சிறிதும் வீண் போகவில்லை என்பதற்கு அடையாளமாக, தலைவர் கலைஞரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்ற நல்ல செய்தியை வெளியிட்டு, நமக்கெல்லாம் காவேரி மருத்துவமனை நன் நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது.


தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் ஏராளமான தியாகத் தழும்புகளை இன்முகத்தோடு ஏற்ற, தடந்தோள் கொண்ட உடன்பிறப்புகளால் தாங்கி நிற்கும் அசைக்க முடியாத கோட்டை. அந்த உடன்பிறப்புகளில் ஒருவரை இழந்தால் கூட அந்தச் செய்தி, என் மனதை இடிபோல் வந்து தாக்குகிறது என்பதை தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் உணர வேண்டும் என்று பெரிதும் கேட்டுக் கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்து, தலைவர் கலைஞரால் இன்றுவரை எந்த நிலையிலும் தவறாது கடைப்பிடிக்கப்பட்டு வரும் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற தாரக மந்திரத்தை மனதில் தாங்கி அதை வாழ்நாள் முழுதும் பின்பற்றி அறிஞர் அண்ணாவுக்கும், தலைவர் கலைஞருக்கும் பெருமை சேர்க்க வேண்டுமே அன்றி, கழக உடன்பிறப்புகள் யாரும் தங்களின் இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #DMKCadres #Karunanidhi
Tags:    

Similar News