செய்திகள்

செல்போன் கோபுர பேட்டரிகளை திருடிய 8 வாலிபர்கள் கைது - சரக்கு ஆட்டோ பறிமுதல்

Published On 2018-07-30 16:08 GMT   |   Update On 2018-07-30 16:08 GMT
ஆவுடையார்கோவில், அறந்தாங்கி பகுதிகளில் செல்போன் கோபுர பேட்டரிகளை திருடி வந்த 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சரக்கு ஆட்டோ மற்றும் ஒரு காரை போலீசார் பறி முதல் செய்தனர். #BatteriesTheft
ஆவுடையார்கோவில்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் ஆவுடையார்கோவில் அருகே துரைராசபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் செல்போன் கோபுரத்திற்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு ஆட்டோவில் வந்த 5 பேரையும் அழைத்து சென்று, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.



போலீசார் விசாரணையில், இவர்கள் திருவாடானை தாலுகா ஆரக்கோட்டை இலுப்பக்குடியை சேர்ந்த ஆனந்தபிரசாத் (வயது 20), கரூர் களபத்தை சேர்ந்த ராஜபாரதி (26), அறந்தாங்கி எருக்கலக்கோட்டையை சேர்ந்த பாண்டியராஜன் (30), அதே பகுதியை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (30), கண்ணன் (25) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆவுடையார்கோவில், எழுநூற்றி மங்களம் மற்றும் புதுக்கோட்டை பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களில் உள்ள பேட்டரிகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த சரக்கு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அறந்தாங்கி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் செல்போன் கோபுரத்தில் உள்ள பேட்டரிகளை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரில் வந்த திருச்சி மணிகண்டம் பகுதியை சேர்ந்த கார்த்திக்கேயன் (20), சதிஷ்குமார் (22). ஜெரல்டு (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் 24 செல்போன் பேட்டரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News