செய்திகள்

கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை

Published On 2018-07-19 03:06 GMT   |   Update On 2018-07-19 03:06 GMT
சென்னையில் கற்பழிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு, போதை ஊசி போட்டது பற்றி போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct
சென்னை:

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமி, 17 காமக்கொடூரன்களால் கற்பழித்து சீரழிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில், இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் கொடுமை நடந்த, குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு முன்பு, பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புக்குள் வசிப்பவர்களை தவிர வெளியாட்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. காவலாளிகளே சிறுமியை நாசமாக்கியதால் அங்கு வசிப்பவர்களுக்கு காவலாளிகள் மீதுள்ள நம்பிக்கை போய்விட்டது. இதனால் அங்கு வசிப்பவர்களே தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக காவல்பணியில் ஈடுபடுகிறார்கள். அயனாவரம் பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள்.

இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கை மிகவும் கவனமாக விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த தகவல் அடிப்படையில் தான் 17 பேரையும் கைது செய்துள்ளோம். தற்போதைய நிலவரப்படி இந்த வழக்கில் 17 பேர் தான் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சிறுமியை பெரும்பாலும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கு செல்லாத நேரத்திலும், தங்கள் இச்சைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். பெரும்பாலும் கழிவறையில் வைத்தே பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.

“நீல நிறத்தில் உள்ள போதை ஊசியை தனக்கு கத்தி முனையில் மிரட்டி போட்டுவிடுவார்கள் என்றும், போதை ஊசியைப் போட்ட உடன் மயக்க நிலை வந்துவிடும்” என்றும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அந்த போதை ஊசியின் பெயர் என்ன? என்பது பற்றி சிறுமியால் சொல்லமுடியவில்லை. இதுபற்றி கைதான 17 பேரிடமும் விசாரித்துவிட்டோம். அவர்கள் போதை ஊசி பயன்படுத்தவில்லை என்று மறுத்துவிட்டனர். இருந்தாலும் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கைது செய்யப்பட்டவர்களை தேவைப்பட்டால் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம். விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

நேற்று இந்த வழக்கு தொடர்பாக, கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தடயங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரும், புழல் மத்திய சிறையில், தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடைக்கப்பட்டுள்ள அறை மிகவும் பெரிய அறையாகும்.

அவர்கள் அடைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மற்ற கைதிகள் செல்ல சிறை காவலர்கள் அனுமதிக்கவில்லை. மற்ற கைதிகள் இவர்களை தாக்கக்கூடும் என்பதற்காக இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

17 பேரும், மிகவும் பதற்றமாகவும், சோர்ந்த முகத்தோடும் காணப்பட்டனர். நேற்று அவர்கள் சரிவர சாப்பிடவில்லை. சாப்பிடும் நேரத்தில் கூட, அவர்களுடன் சிறை காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.  #ChennaiGirlHarassment #POCSOAct
Tags:    

Similar News