செய்திகள்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2018-07-16 11:49 GMT   |   Update On 2018-07-16 11:49 GMT
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் திடீரென 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:

சேலம் குகை பஞ்சந்தாங்கி ஏரி கொல்லப்பட்டரை தெருவை சேர்ந்தவர் சந்தியாதேவி (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி சரண்தேவி(5) என்ற மகளும், 10 மாதம் ஆன சவுமியா என்ற குழந்தையும் உள்ளனர்.

இன்று காலையில் சந்தியாதேவி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது 2 குழந்தைகளுடன் மனு கொடுப்பதற்காக வந்தார். அப்போது அவர், குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு கையில் வைத்திருந்த மண்எண்ணெயை திடீரென தலையில் ஊற்ற முயன்றார். இதை பார்த்த போலீசார், ஓடி சென்று தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை வாங்கி அப்புறப்படுத்தினார்கள்.

அப்போது அவர், போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து சந்தியாதேவியை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வைத்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான், கூலி வேலை செய்து வருகிறேன். எனது ஊரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வெள்ளிப்பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவரது கடையில் நான் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நாங்கள் இருவரும் 2-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தோம். இதனால் எனக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் பிறந்த சான்றிதழிலும் தகப்பனார் பெயர் கார்த்திகேயன் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அவர், என்னுடன் வாழ மறுத்து வருகிறார். குடும்ப செலவுக்கும் பணம் தருவதில்லை. இது குறித்து கேட்டால் என்னை அவர் அடித்து உதைக்கிறார். வலி தாங்க முடியாமல் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார், இது உங்கள் குடும்ப வி‌ஷயம் என்று கூறி அனுப்பி வைத்து விட்டனர். எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

சேலம் பொன்னம்மா பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வேலவன். இவரது மனைவி ரேவதி (வயது 31). மனு நீதி நாளான இன்று காலை ரேவதி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென அவர் நுழைவு வாயில் முன்பு வைத்து மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்த போலீசார் அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது உறவினர் ஒருவருக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் கடன் கொடுத்ததாகவும், அவர் திருப்பி தரவில்லை என்றும், இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News