செய்திகள்

பிணத்தை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட அரசு ஆஸ்பத்திரி துப்புரவு ஊழியர் சஸ்பெண்ட்

Published On 2018-06-13 11:59 GMT   |   Update On 2018-06-13 11:59 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு லஞ்சம் கேட்ட துப்புரவு ஊழியரை சஸ்பெண்டு செய்து டீன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை:

கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கோவை மட்டுமன்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.

தற்கொலை மற்றும் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவ்வாறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஒரு உடலை பிணவறையில் இருந்து வெளியே எடுத்து வந்து உறவினர்களிடம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஊழியர் லஞ்சம் கேட்கும்போது அருகில் போலீஸ்காரர் ஒருவர் நிற்கும் காட்சியும் அதில் பதிவாகி உள்ளது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கும்போது 2 ஆயிரம், 3 ஆயிரம் பணம் கேட்பதாக ஏற்கனவே புகார் வந்து இருந்தது.

இந்த நிலையில் பிணத்தை ஒப்படைக்க போலீசார் முன்னிலையில் ஊழியர் லஞ்சம் கேட்ட விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தினார். அப்போது லஞ்சம் கேட்டது அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வரும் பரமசிவம்(42) என்பது தெரிய வந்தது. அவரை சஸ்பெண்ட் செய்து டீன் அசோகன் உத்தரவிட்டார். பரமசிவம் லஞ்சம் கேட்டபோது அங்கு இருந்த போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News