செய்திகள்

அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 16-வது நாளாக நீடிப்பு: மாவட்டத்தில் 8 லட்சம் தபால்கள் தேக்கம்

Published On 2018-06-07 17:15 GMT   |   Update On 2018-06-07 17:15 GMT
கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் வேலைநிறுத்தம் நேற்று 16-வது நாளாக நீடித்ததால் மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் தபால்கள் தேக்கம் அடைந்தன.
நாமக்கல்:

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 16-வது நாளாக நீடித்தது.

இதனால் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 342 தபால் நிலையங்களில் 252 கிளை தபால் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. எனவே கிராமபுறங்களில் தபால் பட்டுவாடா, அஞ்சலக பண பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய, கோட்ட செயலாளர் செந்தில் கூறியதாவது :-

நாமக்கல் மாவட்டத்தில் 16 நாட்களாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 570 பேர் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் கிராமபுறங்களில் உள்ள தபால் நிலையங்களில் சுமார் 8 லட்சம் தபால்கள் தேங்கி உள்ளன. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News