செய்திகள்

அரியலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை

Published On 2018-05-22 16:19 GMT   |   Update On 2018-05-22 16:19 GMT
அரியலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை பெய்யும் போது சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
அரியலூர்:

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் கடந்த 4–ம் தேதி தொடங்கியது. கத்திரி வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஆனால், அரியலூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்தது.

இந்நிலையில், கடந்த 18–ந்தேதி அரியலூரில் திடீரென்று பலத்த காற்று வீசி இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக மீண்டும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அரியலூர் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது.

இதையடுத்து இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின. மழை பெய்யும் போது பலத்த சூறாவளி காற்றும் வீசியதால் அரியலூர்–செந்துறை சாலையில் இருசுகுட்டை பகுதியில் சாலையோரத்தில் 50 ஆண்டு பழமையான அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

இதேபோல் கல்லூரி சாலை, அரியலூர் அரசு கலை கல்லூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் நின்ற சில மரங்கள் வேரோடு சாய்ந்தும், சில மரங்களில் கிளைகள் முறிந்து விழுந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் மின்சார கம்பிகள் மீது பட்டதால் மின்சாரம் கம்பிகளும் தாழ்வாக தொங்கின. இதனால் நிறைய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நகராட்சி ஊழியர்கள் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மழை பெய்யும் போது மின் தடை ஏற்பட்டது. இரவு வரை மின்சாரம் வரவில்லை. சுமார் அரை மணிநேரம் மழை நீடித்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று மாலை பெய்த மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.
Tags:    

Similar News