செய்திகள்

துப்பாக்கிச்சூடு நடத்த மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? - கமல்ஹாசன் கேள்வி

Published On 2018-05-22 12:24 GMT   |   Update On 2018-05-22 13:17 GMT
ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், துப்பாக்கி சூடு நடத்த மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #SterliteProtest #KamalHaasan
சென்னை:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் வாழும் பகுதியை மாசுபடுத்திக்கொண்டு இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். மேலிடத்தில் இருந்து உத்தரவு வராமல் இத்தகைய துப்பாக்கிச்சூடு நடக்க வாய்ப்பு இல்லை. இந்த சம்பவத்திற்கு அதிகாரிகளை மட்டுமே பழிவாங்கிவிட கூடாது. மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? என்பதே தமிழகத்தின் கேள்வி.

அரசு வன்முறையும் கண்டிக்கத்தக்கதே. பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரச்சனைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்க கூடாது. 

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
Tags:    

Similar News