செய்திகள்
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது எடுத்த படம்.

நாகை கடலில் இறங்கி விவசாயிகள் நாளை தற்கொலை போராட்டம்

Published On 2018-05-14 09:32 IST   |   Update On 2018-05-14 09:32:00 IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் நாளை விவசாயிகள் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். #CauveryIssue #TNFarmers #Protest
கீழ்வேளூர்:

நாகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கும் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. கடந்த 2016-2017-ம் ஆண்டு வறட்சியால் கடைமடை பகுதியில் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மன உளைச்சலில் உயிரிழந்தனர்.

2016-2017-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதில் ரூ.160 கோடிக்கு மேல் பாக்கிஉள்ளது. காவிரி நீர் கடைமடை வரை வந்து சேராததால் கதிர் வரும் பருவத்தில் பயிர்கள் கருகியது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டது. 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.


டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் வாய்க்கால், குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இது அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) நாகையில் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்படும். அதன்படி நாளை நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கிறோம். பின்னர் அங்கிருந்து நாகை கடலுக்கு சென்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #TNFarmers #Protest
Tags:    

Similar News