செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பா.ஜனதா நெருக்கடி கொடுக்கிறது- தமிமுன் அன்சாரி

Published On 2018-05-12 08:51 GMT   |   Update On 2018-05-12 08:51 GMT
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். #ThamimunAnsari #EdappadiPalanisamy
சென்னை:

மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கடந்த 9-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

அப்போது பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் தமிமுன் அன்சாரி விவாதித்துள்ளார். இதுகுறித்து அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

ரமலான் நோன்பு தொடங்குவதற்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நோன்பு கஞ்சி அரிசி வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.

இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக அனைத்து பள்ளிவாசல்களுக்கும் தேவையான அரிசிகளை வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்தேன்.

நான் முதல்-அமைச்சரிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. ஏனென்றால் நான் எடப்பாடி பழனிசாமி பக்கமும் இல்லை, தினகரன் பக்கமும் இல்லை. இரு கட்சியிலும் இருந்து சமதூரத்தில் விலகி இருக்கிறேன். இருவரின் அரசியல் மீது விமர்சனம் உண்டு. என் கட்சி வழி காட்டுதல்படி நான் தனித்தே செயல்படுகிறேன்.

காவிரி பிரச்சனை, நீட்தேர்வு, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி போன்றவற்றில் தனித்து போராடுகிறோம்.

எடப்பாடி பழனிசாமி அரசு மீது எங்களுக்கு விமர்சனம் இருந்தாலும் மக்கள் பிரச்சனைக்கு பார்க்க வேண்டும் என்றால் உடனே நேரம் ஒதுக்கி தருகிறார். ஆனாலும் அவரது அரசியல் நிலைப்பாட்டில் எங்களுக்கு விமர்சனம் உண்டு.

இதைபோல் தினகரன் மீது மரியாதை இருந்தாலும் பிரதமருக்கு எதிராக கருப்புகொடி போராட்டம் வேண்டாம் என்று அறிவித்தது அரசியலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் பிரிந்த சமயத்தில் தனியரசு, கருணாஸ், நான் ஆகிய 3 பேரும் சமரசம் செய்ய முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. அதனால் நாங்கள் விலகி நிற்கிறோம்.


அ.தி.மு.க. ஆட்சிக்கு பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி அரசை அகற்றினால் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்படுகிறது.

எடப்பாடி ஆட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். அதனால் தான் அ.தி.மு.க. ஆட்சியின் குரல்வளையை நெரிக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் வரை அ.தி.மு.க. ஆட்சிக்கு சிக்கல் இருக்காது. அதன்பிறகு நிலைமை மாறலாம்.

பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

இவ்வாறு தமிமுன் அன்சாரி கூறினார். #ManithaneyaMakkalJananayakaKatchi #ThamimunAnsari #EdappadiPalanisamy
Tags:    

Similar News