காரைக்குடியில் வீட்டை உடைத்து நகை கொள்ளை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் அவுசிங்போர்டு அருகில் உள்ள உமையாள்திருநகரைச் சேர்ந்தவர் தவமணிவாசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 36). இவர் தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலைச்செல்வி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 17 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.
வீடு திரும்பிய கலைச் செல்வி கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடி அருகே சாக்கோட்டை போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரியாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மணிகண்டன் (25). இவர் நேற்று உறவினர் மாரியம்மாளுடன் கண்டனூர் காட்டுப்பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டியது. மணிகண்டன் தர மறுத்ததால் அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பியது.
இதுகுறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடி தாலுகா நேமத்தான்பட்டி மாணிக்க வாசகம் தெருவைச் சேர்ந்தவர் அழகு. சம்பவத்தன்று இவரது வீட்டில் புகுந்த புதுக்கோட்டை மாவட்டம் உச்சாணிபுதூரைச் சேர்ந்த மணிமுருகன் (28) என்பவர் பீரோவைத் திறந்து ரூ. 34 ஆயிரத்தை திருடினார். அப்போது வீட்டுக்கு வந்த அழகு, அவரை கையும் களவுமாக பிடித்து செட்டிநாடு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் மணிமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை, நகை-பணம் பறிப்பு போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கண்டனூர் காட்டுப்பகுதியில் சமூக விரோதிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே போலீசார் இனியும் தாமதிக்காமல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.