செய்திகள்
சிவகங்கை வீரர்-வீராங்கனைகள் பதக்கம் வென்று சாதனை
மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
காரைக்குடி:
மாநில அளவிலான 36-வது மூத்தோர் தடகள போட்டிகள் கரூரில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மூத்தோர் தடகள சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்புராம், துணைத்தலைவர் துரைசிங்கம் ஆகியோர் தலைமையில் 45 வீரர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 10 பேர் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
சிங்கம்புணரியை அடுத்த செல்லியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன்(வயது 80) 75 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் 800 மீ., 1,500 மீ., 5,000 மீ. ஆகிய ஓட்டப்பந்தயங்களில் முதலிடம் பிடித்து 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதேபோன்று காரைக்குடியை சேர்ந்த பொசலான்(73) 70 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் 80 மீ. தடை தாண்டுதல், மும்முறை தாண்டுதல் ஆகிய போட்டிகளில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் 2-ம் இடமும் பிடித்து 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றார்.
காரைக்குடியை சேர்ந்த கிருஷ்ணன் 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் போல்வால்ட் போட்டியில் 2-ம் இடமும், மும்முறை தாண்டுதல் போட்டியில் 3-ம் இடமும் பிடித்து ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல் காரைக்குடியை சேர்ந்த ராஜாமணி 65 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் 5 கி.மீ. நடை போட்டியில் வெள்ளிப்பதக்கமும், வேலுச்சாமி என்பவர் 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான 800 மீ. ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் வென்றனர். ஸ்ரீராம்நகரை சேர்ந்த கணேசன் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், அதே ஊரை சேர்ந்த இப்ராகிம் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கமும் வென்றார்.
இதேபோன்று பொன்னமராவதியை சேர்ந்த வீராங்கனை சண்முகவள்ளி 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான 100 மீ., 800 மீ., 1,500 மீ. ஓட்டப்பந்தயங்களில் 2-ம் இடம் பிடித்து 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றார். ஸ்ரீராம்நகரை சேர்ந்த சாந்தி 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப்பதக்கமும், காளையார்கோவிலை சேர்ந்த ஆல்பர்ட் 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான 5 கி.மீ. நடை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் வருகிற பிப்ரவரி மாதம் 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பெங்களூருவில் நடைபெறும் தேசிய அளவிலான மூத்தோர் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.