செய்திகள்

மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்களே நோய்களுக்கு காரணம்: அமைச்சர் பேச்சு

Published On 2017-11-17 19:54 IST   |   Update On 2017-11-17 19:54:00 IST
இன்றைய காலகட்டத்தில் ஏற்படும் தொற்று நோய்களுக்கு மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்களே காரணமாகும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகராட்சி, கலீப்நகர் தனியார் பள்ளியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை புதுக்கோட்டை சார்பில் உணவு பாதுகாப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து முன்னி லையில்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் .சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

முகாமில் அமைச்சர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மழைக்காலத்தில் உணவு பாது காப்பு மேலாண்மை சம்மந்தமாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வழங்கினார். பொது மக்கள், பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடி நீரும் வழங்கினார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:

பொதுமக்களிடையே இன்றைய காலகட்டத்தில் ஏற்படும் தொற்று நோய்களுக்கு மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்களே காரணமாகும். எனவே பொதுமக்கள் உடல் நலன்களை பாதுகாக்க உணவு பாதுகாப்பு மேலாண்மை குறித்து உரிய விழிப்புணர்வு பெற்றிட வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

தேங்கி நிற்கும் சுத்தமான நீரில் டெங்குகொசு உருவாகிறது. டெங்குகொசு பகலில் மட்டுமே கடிக்கும். உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தலின்படி டெங்கு காய்ச்சலுக்கு ஊசி போடக் கூடாது. இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தங்களது வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மழைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு மேலாண்மை குறித்தும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வி கற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கூறினார்.

நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.ரமேஷ்பாபு, மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேட் (எ) அப்துல்ரகுமான் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News