வேதாரண்யத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் கீழசேதுரஸ்தா பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சிம்பு (வயது 38). விவசாயி. இவருடைய மனைவி மீரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிம்பு நேற்றுமுன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் காரைக்காலில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று பாலகிருஷ்ணன் சிம்புவின் வீட்டிற்கு சென்றபோது அங்கு மாடிவீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. உடனே தனது மகன் சிம்புக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சிம்பு விரைந்து வந்து வீட்டை பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகை, ரூ.5 ஆயிரம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சிம்பு வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இன்று சம்பவ இடத்தில் மோப்ப நாய் துனித் மூலம் ஏட்டு மதி துப்புதுலக்கினார். மேலும் கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.