கந்தர்வக்கோட்டை அருகே லாரி மோதி ஒருவர் பலி
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அடுத்த பி.அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது50). அதே பகுதியை சேர்ந்த ராமநாதன், தியாகராஜன் ஆகிய மூன்று பேரும் வைத்தீஸ்வரர் கோவிலுக்கு விரதம் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மூன்று பேரும் வைத்தீஸ்வரர் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர். பழைய கந்தர்வக்கோட்டை பகுதியில் நடந்து சென்ற போது கந்தர்வக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி விசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.