செய்திகள்

சீர்காழி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

Published On 2017-04-22 15:46 IST   |   Update On 2017-04-22 15:46:00 IST
சீர்காழி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீர்காழி:

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்படி நாகை மாவட்டம், சீர்காழி அருகே கடலங்குடி கடைவீதியில் இருந்த மதுக்கடையும் மூடப்பட்டது.

இதையடுத்து கடலங்குடி குருவித்தோப்பு என்ற இடத்தில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் கடலங்குடி, ஓடக்கரை, செட்டிக்கட்டளை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடலங்குடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேற்கண்ட இடத்தில் மதுக்கடையை திறந்தால் விவசாயத்தை நம்பி இருக்கும் நாங்கள் பாதிக்கப்படுவோம் என்றும், எனவே மதுக்கடையை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான், மண்டல துணை தாசில்தார் சவிதா, மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News