செய்திகள்

வி.கைகாட்டி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-04-03 22:49 IST   |   Update On 2017-04-03 22:49:00 IST
வி.கைகாட்டி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமானம் திருப்பணிகள் நடைபெற்று நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 9.30 மணியளவில் கலசம் புறப்பாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர்.

பின்னர் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமான கலசத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பாலமுருகன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இதில் வி.கைகாட்டி, தேளூர், நாகமங்கலம், ரெட்டிப்பாளையம், காட்டுபிரிங்கியம், ஓரத்தூர்,  விளாங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News