செய்திகள்
கொட்டும் மழையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

8 வழிச்சாலையை ரஜினி ஆதரித்ததால் சூப்பர் வழிச்சாலையாக அமையும்- அமைச்சர் உதயகுமார்

Published On 2018-07-16 11:02 IST   |   Update On 2018-07-16 11:02:00 IST
ரஜினி ஆதரவு அளித்துள்ளதால் 8 வழிச்சாலை சூப்பர் வழிச்சாலையாக அமையும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். #Rajinikanth #Udhayakumar #ChennaiSalemGreenExpressway
மதுரை:

அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி மதுரையில் தொடங்கி உள்ளது.

நேற்று மாலை நடைபெற்ற விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

இன்று காலை கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 1,000 இளைஞர்கள் சைக்கிள் பேரணியில் புறப்பட்டனர்.

மதுரை மாவட்டம் முழுவதும் 5 நாட்கள் அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.

பேரணியில் சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. அரசு தமிழக மக்களுக்கு தொடர்ந்து சிறப்பான திட்டங்களை தந்து வருகிறது.

மக்கள் உரிமைகளை பெற்றுத்தருவதில் அ.தி.மு.க. அரசு என்றைக்கும் சளைக்காமல் செயல்பட்டு வருகிறது.

காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பேணி பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசுடன் அ.தி.மு.க. அரசு இணக்கமாக செயல்படுவதால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை, சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் பெரும்பாலான மக்கள் பயன் அடைகின்ற மகத்தான திட்டமாகும்.


8 வழிச்சாலை திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். இதன் மூலம் சூப்பர் வழிச்சாலையாக இது அமையும்.

தமிழகம் வந்த பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா ஊழல் தொடர்பாக பேசியது அவரது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு தான். பாரதிய ஜனதா கூட்டத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை அமித் ஷா பேச மாட்டார்.

பாரதிய ஜனதா தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளத்தேவையில்லை.

ஜெயலலிதா பேரவை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் பேரணி வருகிற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அது போல இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற ஜெயலலிதா பேரவை தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சைக்கிள் பேரணியில் சரவணன் எம்.எல்.ஏ., வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  #Rajinikanth #TNMinister #Udhayakumar #ChennaiSalemGreenExpressway
Tags:    

Similar News