செய்திகள்

தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது- திருநாவுக்கரசர்

Published On 2018-07-10 09:33 GMT   |   Update On 2018-07-10 09:33 GMT
அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கால் ஊன்ற முடியாது என்று மதுரை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் கூறினார்.
அவனியாபுரம்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

லோக் ஆயுக்தா சட்டம் தமிழக சட்டமன்றத்தில் அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை. அவசர கோலத்தில் கொண்டு வந்துள்ளனர்.

எந்த வகையான விதிகளோடு வைக்கப்பட்டு ஒரே நாளில் கொண்டு வரப்பட்டது என்பது தெரியவில்லை. அதனால் தி.மு.க., காங்கிரஸ் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம். லோக் ஆயுக்தா விசயத்தில் புதிய மாற்றங்கள், திருத்தங்கள் செய்து அமல்படுத்த வேண்டும்.

அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்ற முடியாது. தமிழக மக்கள் பா.ஜனதாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. அதே போல் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 2 நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு வந்துள்ளது. பின் 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டு தீர்ப்பு வர உள்ளது.

எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தமிழகத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் வரலாம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் என்பது பண மதிப்பீடு போல் ஒரே இரவில் அறிவிக்க முடியாது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசிய கட்சிகளுடனும்-மாநில கட்சிகளுடனும் பேசி முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அண்ணாநகரில் நடந்தது. இதில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி.ஜே.காமராஜ், செய்யதுபாபு, ராஜாஹசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வாக்காளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது, தேர்தலின்போது எப்படி செயல்படுவது? உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. #Congress #Thirunavukkarasar #BJP #Amitshah
Tags:    

Similar News