செய்திகள்

எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-06-02 09:19 GMT   |   Update On 2018-06-02 09:19 GMT
எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று கோவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #SVeShekher
கோவை:

கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் 10-வது வீதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 150 ஆண்டு காலத்தில் எந்த அரசாலும் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனைக்கு விடிவு தந்திருக்கும் பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கையெழுத்திட்ட மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தி.மு.க. -காங்கிரஸ் கட்சிகள் தமிழ மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மத்தியில், மாநிலத்தில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது அவர்கள் ஒரு முறை கூட தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. வரும் காலத்தில் காவிரி விவகாரத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதனை தீர்க்க கூடிய இடத்தில் தி.மு.க. -காங்கிரஸ் இருக்க வேண்டும்.

தூத்துக்குடி சம்பவத்தில் பயங்கரவாத சக்திகளை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. இனி மேலாவது அதனை செய்ய வேண்டும். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் பின்னர் அங்கு தேவையானவற்றை செய்வோம்.

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தமிழகத்திற்கு தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் எதை கொண்டு வந்தாலும் சிலர் திட்டமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் தமிழகம் முன்னேற கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்கள் ஒன்றரை கோடி தமிழர்களை கொன்று குவித்து ராஜபக்சேவின் கைக்கூலிகள். அவர்களை ஒன்றரை கோடி தமிழர்களின் ஆவி சும்மா விடாது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் தேசத்துக்கு எதிராக செயல்பட்டதால் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளாக தி.மு.க., நாடகம், சினிமாவில் வளர்ந்து வருகிறது. அவர்கள் தமிழக மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் பல்வேறு கோடி திட்டங்களை செய்துள்ளது. காங்கிரஸ் ஏற்றி வைத்த கடன்கனை அடைத்து வருகிறது.


பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. எஸ்.வி. சேகர் பிரச்சனையில் சட்டம் தன் கடமையை செய்யும். கர்நாடகாவில் காலா படம் திரையிட கூடாது என்பது என்ன நியாயம். இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாகவோ, நேரிலோ கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமியுடன் பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சி.ஆர். நந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னராசு, தேசிய செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். #BJP #PonRadhakrishnan #SVeShekher
Tags:    

Similar News