செய்திகள்

போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை: முதல்வர், துணை முதல்வரை விசாரிக்க வேண்டும்- முத்தரசன்

Published On 2017-11-19 21:51 IST   |   Update On 2017-11-19 22:00:00 IST
போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு என்னென்ன இருந்தது தொடர்பாக முதல்வர் , துணை முதல்வரிடம் விசாரிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த இல்லத்தில் இருந்தது ஜெயலலிதா, சசி கலாதான். அதற்கு பிறகு அங்கு என்னென்ன இருந்தது என்ற விபரங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்குத்தான் தெரியும்.

எனவே அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தவேண்டும். மேலும் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்வரும் அறிக்கை அளிக்க வேண்டும்.

ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு விவகாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை கூறி வருகிறார். நேற்று சென்னையில் பேட்டியளித்த அவர் ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது உண்மை, அது இந்திய கடற்படையினர் நடத்தவில்லை என்று கூறியுள்ளார்.

இதேபோல் தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வாங்கி தருவதாக உறுதியளித்தார். அதன்பிறகு பின்வாங்கி விட்டார். மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தில் இந்திய கடற்படையே மன்னிப்பு கேட்ட பிறகு அதனை திசை திருப்ப அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயல்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது. எதற்கெடுத்தாலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கே ரூ.3 லட்சம் கொடுக்கவேண்டிய சூழல் உள்ளது. புதுக்கோட்டையில் இதுதொடர்பாக வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்க அனைத்து அமைச்சர்களும் தயாராகி விட்டனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவையில் ஆய்வு மேற்கொண்டதை நியாயப்படுத்தி வருவதே இதற்கு சாட்சி. இது ஏற்புடையது அல்ல.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News