null
ஒரே மாதிரி முறுக்கு வேண்டாம்! தீபாவளிக்கு இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
- எத்தனை இனிப்பு வகைகள் இருந்தாலும் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும்!
- நல்ல எண்ணெயில் சுட்டால் முறுக்கை 2 மாதத்திற்குக் கூட வைத்து சாப்பிடலாம்.
தீபாவளி நெருங்கிவிட்டது. அனைவரது வீட்டிலும் அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் சுடும் வாசம் வீசத்தொடங்கியிருக்கும். நாம் எத்தனை இனிப்பு வகைகள் சாப்பிட்டிருந்தாலும், அத்துடன் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும் என நாவின் சவை அரும்புகள் கேட்கும். அப்படிப்பட்ட முறுக்கில் பலவகைகள் உள்ளன. வெவ்வேறு பொருட்களை பயன்படுத்தி முறுக்கு சுடலாம். அந்தவகையில் பாசிப்பருப்பு முறுக்கு எப்படி சுடலாம் என பார்ப்போம்.
செய்முறை
பாசிப்பருப்பு முறுக்கு சுடுவதற்கு அரை கப் வெள்ளை உளுந்து, கால் கப் பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும். பின்னர் இவை இரண்டையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்ததும், சிறிதுநேரம் ஆறவிடவேண்டும். பின்னர் தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கூடவே 4 கப் அரிசிமாவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அரைத்த பாசிப்பருப்பு கலவை, கருப்பு எள் அல்லது வெள்ளை எள், கொஞ்சமாக உப்பு மற்றும் மிதமான சூட்டில் 2 கரண்டி எண்ணெய் சேர்க்கவேண்டும். எந்த எண்ணெய் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படி எண்ணெய் வேண்டாம் என நினைப்பவர்கள் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் பெருங்காயத்தூளையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து பிசைந்துக்கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகமாக ஊற்றிவிடக்கூடாது. மாவு கெட்டியாக இல்லாமல் நல்ல மென்மையான பதத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் முறுக்கு நன்றாக வரும். மொறுமொறுவெனவும் இருக்கும். அந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முறுக்கு உரலில் நிரப்பவேண்டும். பின்னர் வாழை இலை அல்லது தட்டு எடுத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய்தடவி அதன்மீது உங்களுக்கு என்ன வடிவத்தில் வேண்டுமோ அதற்கேற்றவாறு பிழிந்து கொள்ளலாம். அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். வெள்ளை நிறத்திலேயே வேண்டும் என்றால் கொஞ்ச நேரத்திலேயே எடுத்துவிடவேண்டும். நன்கு சிவப்பான நிறத்தில் வேண்டும் என்றால் கொஞ்சநேரம் எண்ணெயில் விட்டு எடுக்கவேண்டும். முறுக்கு நன்கு ஆறியபின் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.