பொது மருத்துவம்

இதய நோய்க்கு வித்திடும் அறிகுறிகள்

Published On 2023-11-27 06:30 GMT   |   Update On 2023-11-27 06:31 GMT
  • எல்லா உடல் உறுப்புகளுக்கும் இதயத்தின் ஆரோக்கியம் முக்கியமானது.
  • இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது உடல் நலனுக்கு அவசியமானது.

ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுக்கும் இதயத்தின் ஆரோக்கியம் முக்கியமானது. ஏனென்றால் ரத்தத்தை `பம்ப்' செய்து உடல் முழுவதும் கடத்துவது, உடலின் அனைத்து உறுப்புகள் மற்றும் செல்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை வழங்குவது போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்கிறது. இதயம் சரியாக செயல்படாதபோது இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் அவசியமானது. இதயம் நலமுடன் இருந்தால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஊட்டச்சத்துமிக்க உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் இதய ஆரோக்கியத்தை சுமூகமாக பராமரிக்கலாம். மன அழுத்தத்தையும் குறைக்கலாம். பெண்களை காட்டிலும் ஆண்கள்தான் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். ஆண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் 9 அறிகுறிகள் உங்கள் கவனத்திற்கு...

மார்பு வலி

இதய நோய்க்கான பொதுவான அறி குறிகளில் இதுவும் ஒன்றாகும். மார்பில் அழுத்தம், இறுக்கம் அல்லது மார்பு முழுவதும் சில நிமிடங்கள் வலி நீடிக்கும். அடிக்கடி இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும்.

மூச்சு திணறல்

படிக்கட்டுகளில் ஏறுவது, நடப்பது, மளிகைப் பொருட்களை தூக்கி செல்வது போன்ற அன்றாட நடவடிக்கைகளின் போது மூச்சுத்திணறலை உணரலாம்.

ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது பட படப்பு இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதயம் படபடப்பது அல்லது துடிப்பதை தவிர்ப்பது போல் உணரலாம்.

சோர்வு

போதுமான ஓய்வு எடுத்தாலும் கூட எப்போதும் சோர்வாக இருப்பதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

வீக்கம்

இதய நோய் அறி குறியை வெளிப்படுத்தும் மற்றொரு காரணி வீக்கம். கால்கள், கணுக்கால் அல்லது பாதங்களில் வீக்கம் ஏற்படக்கூடும்.

அசவுகரியம்

உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு சார்ந்த கடினமான வேலைகளில் ஈடுபடும்போது மார்பில் அசவுகரியம் உண்டாவது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

அஜீரணம், நெஞ்செரிச்சல்

குமட்டல், அஜீரணம் அல்லது நெஞ் செரிச்சல் உள்ளிட்ட வயிறு சார்ந்த பிரச்சினைகள் கூட இதய நோய்க்கான அறிகுறிகளாக அமையக்கூடும்.

தலைச்சுற்றல்

தூக்கத்தில் இருந்து எழும்போதோ, அமர்ந் திருந்த இடத்தில் இருந்து எழுந்து நிற்கும்போதோ, வேலை பார்க்கும்போதோ தலைச்சுற்றல் உணர்வை அனுபவிப்பதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

முதுகு வலி

கழுத்து, தாடை அல்லது முதுகில் வலி ஏற்படுவதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக மார்பு வலி அல்லது மூச்சுத்திணறல் போன்ற பிற அறிகுறிகளும் சேர்ந்து வெளிப்படுவது இதய நோய்க்கு வித்திடலாம்.

Tags:    

Similar News