பொது மருத்துவம்

நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு இதய குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டா?

Published On 2023-07-29 07:56 GMT   |   Update On 2023-07-29 07:56 GMT
  • பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்
  • இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கா விட்டால் அது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) மற்றும் இதயத்தின் பம்ப் செய்யும் திறனை குறைத்து இதய செயலிழப்பையும் (ஹார்ட் பெயிலியர்) ஏற்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு நீரிழிவு நோய் இல்லாதவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது 2 மடங்கு அதிகம்.

1. டைப் – 2 நோயாளிகளுக்கு உயிராபத்து அதிகம் வருவது இதய நோய்களால்

2. மற்றவர்களை விட நீரிழிவு உள்ளவர்களுக்கு 3 – 4 மடங்கு அதிகம் வரும்

3. பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்.

மார்பு வலி, மாரடைப்பு, இரத்தக்குழாய் அடைப்பு, இதனால் உடலின் பல பாகங்கள் இரணமாகி, காயப்பட்டு, பயனற்று போதல் இவையெல்லாம் நீரிழிவு ஏற்படுத்தும் அபாயங்கள்.

இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:

1) புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்துதல் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்துதல்,

2) ரத்தக் கொதிப்பு மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்,

3) அதிக உடல் எடை இருந்தால், அதைக்குறைத்தல்,

4) உங்கள் மூன்று மாத ரத்த சர்க்கரையின் சராசரியான எச்.பி.ஏ1 சி யை 7 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருத்தல்,

5) மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளுதல்,

6) தினமும் உடற்பயிற்சி செய்தல்,

7) நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், முட்டையின் வெள்ளை, கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளுதல்.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள் மேல்மூச்சு, தலைச்சுற்றல், மயக்கம், தடுமாற்றம், கிறுகிறுப்பு, நெஞ்சில் பார உணர்வு, பளு அழுத்துவது போல் உணர்வு இவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். இவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடி இ.சி.ஜி மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.

நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News