லைஃப்ஸ்டைல்

சளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி

Published On 2019-04-07 09:22 GMT   |   Update On 2019-04-07 09:22 GMT
பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள கற்பூரவல்லி மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது.

சளி, இருமலால் அவதிப்படும்போது சிரப், டானிக் போன்றவற்றைக் கொடுப்பது தற்போது வழக்கமாக இருக்கிறது. இவையெல்லாம் பயன்பாட்டுக்கு வராத காலக்கட்டத்தில் நமது முன்னோர்கள் இதுபோன்ற பல பிரச்னைகளுக்குக் கற்பூரவல்லி மூலிகையைப் பயன்படுத்தி பக்கவிளைவுகள் இல்லாமல் அவற்றை குணப்படுத்தியிருக்கிறார்கள்.

பழங்காலத்தில் இருந்து நம்முடைய முன்னோர்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் மூலிகைச் செடிகளை வளர்ப்பதை முக்கிய வழக்கமாக கொண்டு இருந்தனர். அவற்றுள் ஒன்றுதான் கற்பூரவல்லி என்ற இந்தப் பச்சிலை. இச்செடி வீடுகளில் இயல்பாக வளரக்கூடிய தன்மை உடையது.

பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள இந்த மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது. ஏனென்றால், குழந்தைப் பருவம் தொடங்கி முதுமைப் பருவம் வரை ஏற்படுகிற அனைத்துவிதமான உடல் நலக்குறைபாடுகளை சரி செய்யும் தன்மை இந்தப் பச்சிலைக்கு உள்ளது.

குறிப்பாக குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிற சுவாசக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், மாந்தம், வாந்தி எடுத்தல், பசியின்மை, சளி, செரிமான குறைபாடு போன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு. வீட்டு மருத்துவத்தில் சிறந்து விளங்கும் இந்த கற்பூர வல்லியினை மழைக்காலம், பனி மற்றும் குளிர்காலங்களில் அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிற நெஞ்சு சளி, சாதாரண காய்ச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘‘கற்பூரவல்லியின் 2 அல்லது 3 இலைகளை 150 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதனுடன் தேன் கலந்து அருந்தலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு கற்பூரவல்லியின் ஓர் இலையை குக்கரில் இருந்து வெளிப்படும் ஆவியில் பல தடவை காட்டி, அதில் இருந்து வடியும் சாறை தாய்ப்பாலுடன் கலந்து ஒரு சங்கு பருக தர வேண்டும்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றால், 30 மில்லி கிராம் அதாவது கால் டம்ளர் புகட்டலாம். ஐந்தில் இருந்து 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியருக்கு கற்பூரவல்லி சாறை அரை டம்ளர் தருவது நல்லது. இவ்வாறு தினமும் உணவு வேளைக்குப் பின்னர் காலை, மாலை என இரண்டு வேளை கொடுத்து வந்தால், வீஸிங் உட்பட சுவாசப் பாதை கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.

மருத்துவ குணம் நிறைந்த இந்தப் பச்சிலையை முதுமைப் பருவத்தினரும் கஷாயமாக குடிக்கலாம். வயோதிக காலத்தில் சர்க்கரை நோய் பொதுவாக காணப்படக்கூடிய பாதிப்பு என்பதால், முதியவர்கள் 5 இலையை நன்றாக நீரில் கொதிக்க வைத்து, தேன் கலக்காமல் 200 மில்லிகிராம் அளவு பருகலாம். இது மட்டுமில்லாமல் கற்பூரவல்லி இலையை உணவு பதத்திலும் சாப்பிடலாம்.

இம்மூலிகையைப் பயன்படுத்தி குழம்பு, ரசம், சூப் செய்யலாம். கடலை மாவில் இந்த இலையைத் தோய்த்து பஜ்ஜி செய்தும் உண்ணலாம். இந்த கற்பூரவல்லி சைனஸ் நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவாகும்.

வாரத்தில் 2 நாட்கள் இவற்றை உணவுக்குப் பின், எடுத்துக்கொண்டால் வாய் மற்றும் மூக்கு வழியாக சளி படிப்படியாக வெளியேறும். உணவுப்பதத்தில் இந்த மூலிகையைப் பயன்படுத்துவதோடு கொதிக்கும் தண்ணீரில் சுக்கு, மஞ்சள், கற்பூரவல்லி மூலிகை போட்டு ஆவி பிடிப்பதும் பயன் தரும்!’’
Tags:    

Similar News