லைஃப்ஸ்டைல்

ஓய்வுக்கு ஓய்வு கொடுங்கள்...

Published On 2019-02-18 03:17 GMT   |   Update On 2019-02-18 03:17 GMT
பணி ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். பணி ஓய்வுக்குப் பின்னர் பலர் ஓய்வே வாழ்க்கை என்று ஒரு இடத்தில் முடங்கி விடுகிறார்கள். இதனால் உடல் நலக்கேடு வரும்போது மிகவும் துவண்டு விடுகிறார்கள்.
பலரும் பணி ஓய்வு என்பதை நிரந்தர ஓய்வு என்றே எண்ணுகிறார்கள். அரசுப்பணி, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வயதில் பணியாளர்களை பணி ஓய்வு செய்கிறார்கள். இந்தியாவும், சீனாவும் அதிவேக வளர்ச்சி பெறுவதைப்பார்த்து மேலை நாடுகள் வியப்பு அடைகின்றன. இதற்கு காரணம் மக்கள் தொகையில் இளைஞர்கள் அதிக அளவில் இருப்பதே ஆகும். எனவே பணி ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். பணி ஓய்வு என்பது விவசாயிகளுக்கோ, வக்கீல் தொழில் செய்பவர்களுக்கோ, மருத்துவர்களுக்கோ, வியாபாரம் செய்பவர்களுக்கோ கிடையாது.

ஏனென்றால் அவர்கள் ஒரு நிறுவனத்தை சார்ந்து இல்லை. இவர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது. உடலும், உள்ளமும் நன்றாக இருக்கும் வரை உழைத்துக்கொண்ட இருப்பார்கள். ஒரு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுகிறவர் கூட தன் உடம்பில் வலு இருக்கும் வரை தன் தொழிலை செய்கிறார். பணி ஓய்வுக்குப் பின்னர் பலர் ஓய்வே வாழ்க்கை என்று ஒரு இடத்தில் முடங்கி விடுகிறார்கள். தங்களையும் தங்கள் உடல் நலத்தையும் பற்றி நினைத்தே வாழ்க்கையை கழிக்கிறார்கள். இதனால் உடல் நலக்கேடு வரும்போது மிகவும் துவண்டு விடுகிறார்கள்.

அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்கிறார்கள். தங்கள் மகனோ, மகளோ தங்களை கவனிக்கவில்லை என்ற வருத்தம் சிலரிடம் மேலோங்கி இருக்கிறது. ஓய்வு சிலருடைய மன நிலையையும் பாதிக்கிறது. கணவன், மனைவிக்குள் தேவையற்ற வாதங்கள் தோன்றி வருத்தங்களாக முடிகிறது. இதற்கெல்லாம் காரணம் இவர்களிடம் இருக்கும் அதீத நேரம்தான்.

காலையில் நடைபயிற்சி மற்றும் நண்பர்களை சந்திப்பது, பத்திரிகைகள் படிப்பது, காலை உணவுக்குப்பின் சிறு உறக்கம், மதிய உணவு, அதன்பின் சிறு உறக்கம், மாலை மற்றும் இரவில் தொலைக்காட்சியில் முழு கவனம் என்று பலர் பட்டியலிட்டபடி வாழ்கின்றனர். சிலர் நடைபயிற்சியையோ அல்லது உடற்பயிற்சியையோ கூட மேற்கொள்வதில்லை. தற்போதைய எந்திர யுகத்தில் பெரும்பாலானோர் வாட்ஸ்-அப், முகநூல் போன்றவற்றில் மணிக்கணக்கில் பொழுதை செலவழிக்கிறார்கள். இந்த வாழ்க்கை இவர்களுக்கு சில வருடங்களில் ஒரு சலிப்பை உண்டாக்குகிறது. மேலை நாடுகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முன் அனுமதி இல்லாமல் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாது. ஆனால் இவர்களோ திடீரென்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு செல்வார்கள். நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இது மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அந்த சொற்ப ஓய்வூதியத்திலேயே தங்கள் வாழ்க்கையை அடக்கிக்கொண்டு தங்களுக்கும் தங்கள் மனைவிக்குமான தேவைகளை குறைத்துக்கொள்வார்கள். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வுபெற்ற பலருக்கு ஓய்வூதியம் என்பது கிடையாது. பணி ஓய்வுபெறும்போது தங்கள் மாத வருமானம் தடைபடுவது அவர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது எதிர்பார்த்த ஒன்றுதான். அதற்கான திட்டமிடலை பல வருடங்களுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும்.

இந்த நிலைமைக்கு காரணம் நாம் நமக்கு என்று ஒரு பணியை தேர்ந்தெடுக்காமல் ஓய்வை தேர்ந்தெடுப்பதுதான். செயலற்ற மனது பிசாசுகளின் பட்டறை என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இன்றைய முன்னேறிய மருத்துவ உலகில் ஆரோக்கியம் வெகு விரைவில் கெட்டுப்போவதில்லை. முன்பை விட நாம் நீண்ட நாட்கள் வாழ்கிறோம் என்பதே உண்மை. எனவே பணி ஓய்வு என்பது நிறுவனத்தின் பார்வையில் நமக்கு அவர்கள் கொடுத்திருந்த பணியில் இருந்து மட்டும்தான் விடுதலை. ஆனால் உடலும் உள்ளமும் நமக்கு நன்றாகவே உள்ளது. எனவே நாம் நமக்கு பிடித்த ஒரு பணியை செய்ய வேண்டும். அந்த பணி நாம் பல நாட்கள் செய்ய நினைத்து அலுவலக அவசரங்களினால் செய்ய முடியாமல் போயிருக்கலாம்.



சிலர் புகைப்படம் எடுப்பதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். இப்போது அதை ஒரு தொழிலாக செய்யலாம். ஒரு தொழில் முனைவோராக மாறலாம். இதற்காக பல பயிற்சிகளும் வங்கிகள் வாயிலாக கடன் உதவிகளும் அரசின் மானியமும் கிடைக்கின்றன. தங்கள் அனுபவத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். ஒரு சமுதாய முன்னேற்றமாக கிராமங்களில் ஏழைகளுக்கு எழுத படிக்க கற்றுத்தரலாம். இப்படி ஏதாவது ஒரு தொழில் செய்யும் போது அதில் ஒரு வருவாயும் ஏற்படும் மற்றும் சேவையில் தங்களை ஈடுபத்திக்கொள்ளும்போது மனதிருப்தியும் உடல் ஆரோக்கியமும் பெறுவார்கள். அப்போது குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி திரும்புவதை உணர்வார்கள்.

நீங்கள் உங்கள் மன நிலையை ஓய்வுக்கு தள்ளிவிடாதீர்கள். மனதுக்கு உற்சாகம் அளியுங்கள். முன்னைப்போலவே நல்ல ஆடைகளை அணியுங்கள். ஆண்கள் தினமும் முகச்சவரம் செய்ய மறக்காதீர்கள். கோவில்களுக்கு சென்று வாருங்கள். நண்பர்களிடம் மற்றும், உறவினர்களிடம் உற்சாகமாக பேசுங்கள். மேலும் மற்றவர்களைப்பற்றி பொழுதுபோக்குக்காகக்கூட தவறாகப்பேச பேச வேண்டாம்.

இது எதிர்மறையான மனநிலையை உங்களுக்குள் வளர்க்கும். மேலும் ஒரு எதிர்மறை சக்தி உங்களை சுற்றி உருவாகும். இந்த எதிர்மறை சக்தி எதிர்மறை விளைவுகளையே உங்களுக்கு உருவாக்கும். ஆரோக்கியமாக பேசுங்கள். நல்ல விஷயங்களை பேசுங்கள். உங்கள் மனது இலகுவாகும். இது உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். உங்களுக்கு பிடித்த ஒரு தொழிலை செய்யுங்கள். அலுவலகத்தில் கைகட்டி மேலதிகாரிகளின் கீழ் வேலை பார்த்த உங்களுக்கு தொழிலில் நீங்கள்தான் முதலாளி என்று எண்ணும்போது உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி உண்டாகும். கிடைத்துள்ள நேரத்தை பயனுள்ளதாக்குவோம். நாம் ஓய்வுக்கு ஒரு ஓய்வு கொடுப்போம்.

எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி
Tags:    

Similar News