பொது மருத்துவம்

கண் பார்வை கூர்மையாய் இருக்க...

Published On 2025-11-15 10:58 IST   |   Update On 2025-11-15 10:58:00 IST
  • ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.
  • நீண்டநேரம் செல்பேசி, கணினி பார்த்தால் கண்களில் வறட்சி, அரிப்பு ஏற்படும்.

கண்களிண்களின் மதிப்பு, பார்வைத் திறன் குறையும்போதும், பாதிக்கும்போதும்தான் நமக்குத் தெரியும். ஆனால், எப்போதுமே சில விஷயங்களில் கவனமாக இருந்தால், கண் பார்வையை காத்துக்கொள்ளலாம். தவிர்க்க வேண்டிய அந்த விஷயங்கள் குறித்து பார்ப்போம்...

நீண்ட நேர செல்பேசி, கணினி பயன்பாடு:

தற்போது செல்பேசி, கணினி பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் தொடர்ந்து நீண்டநேரம் இவற்றை பார்த்தால் நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இவை, தலை வலி, மங்கலான பார்வை, கண்களில் வறட்சி மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்துடன், மின்னணுத் திரைகளில் இருந்து வரும் நீல ஒளி, தூக்கத்தைப் பாதிக்கும். எனவே இந்த பிரச்சனையைத் தவிர்க்க 20-20-20 என்ற வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். இதற்கு, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.

'சன் கிளாஸ்' அணியாமல் வெளியே செல்வது:

சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நம்முடைய சருமத்தை மட்டுமின்றி கண்களையும் மோசமாக பாதிக்கும். இது கண் புரை, கண் புற்றுநோய் வருவதற்கு வழிவகுக்கக்கூடும். எனவே வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, அதிலும் வெயிலில் செல்லும்போது 'சன் கிளாஸ்' அணிவது நல்லது.

கண்களைத் தேய்ப்பது :

நீண்டநேரம் செல்பேசி, கணினி பார்த்தால் கண்களில் வறட்சி, அரிப்பு ஏற்படும். இதனால் நம்மை அறியாமலேயே நாம் கண்களை அடிக்கடி தேய்க்க நேரும். இப்படிச் செய்வது கண்களை மேலும் பாதிக்கும். கண்களை அதிகமாக தேய்க்கும்போது, ரத்த நாளங்கள் சேதமடையும்.

இதனால் கருவளையங்கள் போன்றவை ஏற்படும். இவை தவிர, கண்களைத் தேய்க்கும் போது, கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ் தொற்றுகள் கண்களைப் பாதிக்கும்.

தூக்கமின்மை:

சரியாக தூங்கவில்லை என்றால் நம்முடைய உடல், மன ஆரோக்கியம் மட்டுமல்ல, கண் ஆரோக்கியமும் மோசமாக பாதிப்படையும். தூக்கமின்மையானது, மங்கிய பார்வை, கண்களில் வறட்சி, ஒளியின் உணர்திறன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தொடர்ந்து நீடித்தால், தீவிர கண் நோய்க்கும் வழிவகுக்கும். எனவே தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவதை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

கண் பரிசோதனையைத் தவிர்ப்பது:

பெரும்பாலானோர், வழக்கமான கண் பரிசோதனை செய்வதை தவிர்த்துவிடுகின்றனர். பார்வை பாதிக்கப்பட்ட பிறகுதான் மருத்துவரை நாடுகின்றனர். ஆனால், கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதனால், கண் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியலாம். உடனே உரிய சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளலாம்.

Tags:    

Similar News