பெண்கள் உலகம்

கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள்

Published On 2019-02-08 08:03 IST   |   Update On 2019-02-08 08:03:00 IST
கத்தரிக்காய் என்றாலே எனக்கு ‘அலர்ஜி’ என்று சாப்பிட்டு பார்க்காமலே கூறுகிறவர்கள் பலர். ஆனால், அதில் பல சத்துக்கள் இருக்கின்றன. கத்தரிக்காய் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.
கத்தரிக்காய் என்றாலே எனக்கு ‘அலர்ஜி’ என்று சாப்பிட்டு பார்க்காமலே கூறுகிறவர்கள் பலர். அதை எனக்குப் பிடிக்காது, அதில் என்ன இருக்கிறது? என்றும் கூறுவார்கள். ஆனால், அதில் பல சத்துக்கள் இருக்கின்றன. காய்கறி சந்தைகளில் எளிதாக கிடைக்கும் கத்தரிக்காய் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.

கத்தரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதால், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதனால் இருதயத்தின் பலம் அதிகரிக்கிறது. கத்தரிக்காயில் ஊட்டச்சத்துகள் இருப்பதால் உடலுக்கு மென்மை மற்றும் பலத்தை அளிக்கிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்க கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லது.

கால்களில் வீக்கம் இருக்கிறதா? கவலை வேண்டாம். கத்தரிக்காயை அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குணமாகி வரும். வயிற்று பிரச்சினைகள் நீங்க, கத்தரிக்காயை சூப் வைத்து சாப்பிட்டால் சரியாகி விடும். சூப் வைப்பதும் சுலபம்தான். வேகவைத்த கத்தரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும். வயிற்றுக்கு சுகமாகவும் இருக்கும்.

நெருப்பில் சுட்ட கத்தரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் குறையுமாம். இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்களை தடுக்க கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லது.

கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவை தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமை அதிகரிப்பதோடு ஞாபகத் திறனையும் தூண்டுகிறது. உங்களுக்கு அடிக்கடி மறதி ஏற்படுவதாக உணர்ந்தால் உடனே கத்தரிக்காய் சமைத்து சாப்பிடலாம். கத்தரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.
Tags:    

Similar News