லைஃப்ஸ்டைல்

நன்றாக தூங்க விரும்புகிறவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Published On 2018-05-28 08:14 GMT   |   Update On 2018-05-28 08:14 GMT
உங்களால் நன்றாக தூங்க முடியாவிட்டால், இரவில் நீங்கள் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உங்களால் நன்றாக தூங்க முடியாவிட்டால், இரவில் நீங்கள் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். ஏன்என்றால் இரவில் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராது. அதனால் இரவில் நன்றாக தூங்க விரும்புகிறவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்!

* இரவில் பால் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் தூங்க செல்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பாலில் இருக்கும் லாக்டோஸ் செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்தும். அதனால் ஆழ்ந்த தூக்கம் தடைப்பட்டு போகும்.

* இரவில் சாப்பிட்ட பின்பு சாக்லேட் சுவைக்க நிறைய பேர் விரும்புகிறார்கள். ஆனால் அதில் கலந்திருக்கும் இனிப்பு சுவையும், காபினும் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஏதாவது முக்கியமான வேலை பார்ப்பதாக இருந்தாலும் சாக்லேட் சாப்பிடக்கூடாது. அது மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் தடை போட்டுவிடும்.

* இரவில் பீட்சா உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதில் அதிகமான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கலந்திருக்கும். அவை செரிமானம் ஆகாமல் வயிற்றுக்குள் நீண்ட நேரம் தொந்தரவை ஏற்படுத்தும்.

* இரவு சாப்பிட்ட பிறகு பழ ஜூஸ் அருந்துவதும் கூடாது. இரவில் 9 மணிக்கு பிறகு பழ ஜூஸ் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சினை ஏற்படக்கூடும். இதயத்திற்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

* இரவில் சோடா போன்ற பானங்களை பருகவேண்டாம். அதில் வாயுக்கள் கலந்திருக்கும். அவை வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். அதனால் செரிமானத்தில் சிக்கல் ஏற்பட்டு தூக்கம் தள்ளிப்போகும். 
Tags:    

Similar News