குழந்தை பராமரிப்பு

பிறந்த குழந்தைக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பது ஏன்...?

Published On 2024-02-01 09:47 GMT   |   Update On 2024-02-01 09:47 GMT
  • பிலிருபின் என்ற மஞ்சள் நிறமியின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும்.
  • ரத்த சிவப்பணுக்கள் உடையும்போது பிலிருபின் மஞ்சள் நிறமி வெளிப்படுகிறது.

பிறந்த குழந்தையின் ரத்தத்தில் பிலிருபின் என்ற மஞ்சள் நிறமியின் அளவு அதிகரிப்பதால் குழந்தையின் சருமம் மஞ்சள்நிறமாக மாறுவது 'நியோநேட்டல் ஜாண்டிஸ்' (Neonatal jaundice ) எனப்படுகிறது. நிறை மாதத்தில் பிறக்கும் 60 சதவிகிதக் குழந்தைகளுக்கும், குறைமாதத்தில் பிறக்கும் 80 சதவிகிதக் குழந்தைகளுக்கும் இதற்கான அறிகுறிகள் தென்படலாம்.

முதிர்ந்த ரத்தச் சிவப்பணுக்கள் உடையும்போது பிலிருபின் என்ற மஞ்சள் நிறமி வெளிப்படுகிறது. இதை கல்லீரல் உருமாற்றம் செய்து மலத்துடன் சேர்த்து குடல்வழியாக உடலைவிட்டு வெளியேற்றுகிறது. மலத்துக்கு மஞ்சள் அல்லது பிளெயின் நிறத்தைத் தருவது இதுதான்.

 குழந்தை, தாயின் கருவில் இருக்கும் வரை தாயின் கல்லீரல் இந்த வேலையைச் செய்கிறது. எனவே குழந்தை பிறந்த முதல் 24 மணி நேரம்வரை பிலிருபின், மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் அளவுக்கு இருப்பதில்லை. குழந்தையின் கல்லீரல் மற்றும் குடல், திறம்பட இந்த வேலையைச் செய்ய சில நாள்கள் ஆகும்.

குழந்தை பிறந்த 24 முதல் 72 மணி நேரத்தில் ரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகரிக்கும். பிறகு கல்லீரலும் குடலும் நன்கு செயல்பட ஆரம்பித்த பிறகு ஒரு வாரத்தில் இந்த அளவு தானாகக் குறைந்துவிடும். இதற்கு 'பிசியலாஜிகல் நியோநேட்டல் ஜாண்டிஸ்' என்று பெயர்.

மாறாக மிக வேகமாக பிலிருபின் அளவு அதிகரித்து குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது அதை 'எக்ஸாஜிரேட்டடு பிசியலாஜிகல் ஜாண்டிஸ்' என்கிறோம். இந்த அளவு உடனடியாகக் குறைக்கப்படாவிட்டால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். குழந்தைக்கு மூளை பாதிப்பும், வலிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 அதிகரித்த பிலிருபின் அளவைக் குறைக்க போட்டோதெரபி என்கிற சிகிச்சை முறை செய்யப்படுகிறது. மஞ்சள் காமாலை அதிகமுள்ள குழந்தைகளை மருத்துவ தரமுள்ள நீலநிற ஒளியில் குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து வைக்கும்போது பிலிருபின் சிதைந்து மலத்துடன் உடலைவிட்டு வெளியேறுகிறது. அதனால் மஞ்சள்காமாலை மட்டுப்படுகிறது.

இந்த சிகிச்சை எளிமையானது, பக்க விளைவுகள் அற்றது. இதை சரியான நேரத்தில் செய்வதால் குழந்தைக்கு ரத்த மாற்று சிகிச்சை போன்றவற்றைத் தவிர்க்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்துவிதமான மஞ்சள்காமாலைக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியம்.

 பிறந்த 24 மணி நேரத்துக்குள் மஞ்சள் காமாலை ஏற்பட்டாலோ, அது ஒன்றிரண்டு வாரங்கள் தொடர்ந்தாலோ. வேறு காரணங்கள் கண்டறியப்பட்டாலோ, பச்சிளம் குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதித்து முழுமையான பரிசோதனையும் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.

Tags:    

Similar News