குழந்தை பராமரிப்பு

குழந்தைகளின் கிட்டப்பார்வை: ஆசிரியர்களின் பங்கு என்ன?

Published On 2023-03-22 04:55 GMT   |   Update On 2023-03-22 04:55 GMT
  • வகுப்பறை நேரத்தில்தான் மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிக்க முடியும்.
  • கண்ணாடி அணிந்துகொள்ள குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

சமீபத்தில், தன் மருத்துவமனைக்கு அருகிலிருந்த பள்ளி ஒன்றில் உள்ள மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்யச் சென்றிருந்தார் கண் மருத்துவ நண்பர் ஒருவர். அப்போது 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஒருவர், தனது கண் மங்கலாகத் தெரிவதாகவும், தான் அணிந்திருக்கும் கண்ணாடியின் 'பவர்' அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதாகவும், கரும்பலகையில் எதையாவது எழுதி ஆசிரியர் படிக்கச் சொன்னால் கண்ணாடி போட்டாலும் சரியாகத் தெரியவில்லை என்றும் புலம்பியிருக்கிறார்.

அந்த மாணவனின் கண்களைப் பரிசோதித்தபோது அவருக்கு 'கேரட்டோகோனஸ்' (keratoconus) என்ற கருவிழிக் கோணல் பார்வை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக கொலாஜன் கிராஸ் லிங்க் (collagen cross linking) என்ற சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய கருவிழி பாதிப்பு அதிகமாவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும், பக்கத்தில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்கள், நன்றாகப் படிக்காதவர்கள், நோட்டில் அடித்து அடித்து எழுதுபவர்கள் ஆகியோரை அழைத்து வாருங்கள் என்று அந்த மருத்துவர், ஆசிரியர்களிடம் கூறினார். மாணவர்களும் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களைப் பரிசோதித்துப் பார்த்ததில், அவர்களில் பலருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு மாணவன், ஆசிரியர் பாடம் நடத்தும்போது கரும்பலகையில் உள்ள எழுத்துகள் நன்றாகத் தெரியவில்லையென்றால் பக்கத்துப் பையனைப் பார்த்து 'காப்பி' அடிப்பான். அப்போது நோட்டில் அடித்து அடித்து எழுதுவான். இப்படி இருந்தால் உடனடியாகக் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இப்படியான மாணவர்களைக் காண நேர்ந்தால், உடனே அவர்களைத் திட்டவோ அடிக்கவோ செய்யாமல், ஒவ்வொரு மாணவனையும் கடைசி பெஞ்சில் அமர வைத்து, அதாவது இருபது அடி தூரத்தில் அமரவைத்து ஒரு கண்ணைக் கையால் மூடிக்கொண்டு மற்றொரு கண்ணில் கரும்பலகையில் எழுதுவது தெரிகிறதா என்று ஆசிரியர் பரிசோதிக்க வேண்டும். பெரும்பாலும் வகுப்பறை நேரத்தில்தான் மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிக்க முடியும்.

மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி, அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதுகுறித்து விளக்கி, சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து கண்ணாடி அணிந்துகொள்ள குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பார்வையைக் கொடுப்பது நம் சமூகக் கடமை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் உணர வேண்டும். நல்ல பார்வையே தொலைநோக்கில் பார்வையைக் கொடுக்கும்!

Similar News