குழந்தை பராமரிப்பு

ஒரு மோட்டார் சைக்கிளில் 4 பேர் பயணிப்பதை படத்தில் காணலாம்.

சாகச பயணங்களில் விபத்தை தேடி செல்லும் மாணவர்கள்

Published On 2023-03-12 08:23 GMT   |   Update On 2023-03-12 08:23 GMT
  • பிள்ளைகள் ஆசைப்படுகின்றனர் என்பதற்காக பெற்றோர் இருசக்கர வாகனங்களை வாங்கிக் கொடுக்கின்றனர்.
  • மாணவர்கள் செய்யும் தவறால், சாலையில் செல்லும் பொதுமக்களும் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

சமீப காலமாக சாலையில் இளைஞர்கள் சாகச பயணங்களை மேற்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதுபோன்று, தினம்தினம் சாகச பயணம் மேற்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்தாலும், 'நமக்கேதும் நடக்காது' என்ற மனநிலையில், விபரீதம் தெரியாமல் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வாகனம் ஓட்டுவதே அடுத்தடுத்த விபத்துகளுக்கு வழிவகுக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

பிள்ளைகள் ஆசைப்படுகின்றனர் என்பதற்காக பெற்றோர் விலையை கூட யோசிக்காமல் அதிக திறன் கொண்ட புதிய மாடல் இருசக்கர வாகனங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். புதிய மோட்டார் சைக்கிள், அதிக திறன் கொண்டது என்பதால் ஆர்வ மிகுதியில் மாணவர்கள் சாலையில் சாகசங்களை செய்து அதிவேகமாக பறப்பது வாடிக்கையாகி விட்டது.

அதிலும் மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் அமர்ந்து ஹெல்மெட் கூட அணியாமல், மற்ற வாகன ஓட்டுனர்களை அச்சுறுத்தும் வேகத்தில் பறக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறுவது வழக்கமாகிவிட்டது. மாணவர்கள் செய்யும் தவறால், சாலையில் செல்லும் பொதுமக்களும் விபத்தில் சிக்கி வருகின்றனர். சமீப காலமாக நடக்கும் வாகன விபத்தில் சிக்கி உயிரை பறிகொடுப்பவர்கள் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே. அவர்கள் செய்யும் தவறால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி பொதுமக்கள் தான். பொதுமக்கள் தட்டிக்கேட்டாலும், மாணவர்கள் அதனை கண்டுகொள்வதில்லை. ஆசிரியர்களும் தற்போது மாணவர்களை கண்டிக்க முடியாத இடத்தில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:

அசுர வேகத்தில் செல்லும் இளைஞர்கள்

கடலூர் பாதிரிக்குப்பம் கோபிநாத்: இருசக்கர வாகனங்களால் தான் விபத்துகள் அதிகளவு நடக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் வயதில் பைக் வாங்கி கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தினாலும் பெற்றோர் செய்யும் தவறால் பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. விபத்துகளில் அவர்கள் காயமடைந்து கால், கைகளை இழப்பது, உயிர் இழப்பதை காணும் போது உள்ளமெல்லாம் பதை பதைக்கிறது. கடலூர் மாநகரில் இரவில் பல இளைஞர்கள் அதிக திறன் கொண்ட பைக்குகளில் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் சாலையில் அசுர வேகத்தில் செல்லும் போது, பொதுமக்கள் பலர் விபத்தில் சிக்குகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முதலில் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பீனிக்ஸ் பறவை போல்...

விருத்தாசலம் மங்கையர்கரசி: 18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான தகுதியே கிடையாது. ஆனால் 18 வயதுக்கு குறைவான பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்போதைய காலத்தில் அதிகளவு மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வருகின்றனர். இளங்கன்று பயம் அறியாது என்பதை போல ஒரு சில மாணவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களை ஏற்றிக்கொண்டு நான்கு பேர், 5 பேர் என சாகச பயணத்தில் ஈடுபடுகின்றனர். அதுவும் போக்குவரத்து நெரிசல் உள்ள விருத்தாசலம் போன்ற நகரங்களில் அவர்கள் பயணம் மேற்கொள்ளும் போது எதிரே வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர்.

மேலும் பள்ளி சீருடைகளிலேயே நகரை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு மோட்டார் சைக்கிளை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால் அருகிலுள்ள கடைகளில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். மீண்டும் வீட்டிற்கு செல்லும் போது பீனிக்ஸ் பறவை போல பறக்கின்றனர். அப்பாவி விவசாயிகள் மீது அபராதத்தை திணிக்கும் போக்குவரத்து போலீசாரோ, இது போன்ற மாணவர்களை கண்டுகொள்வதில்லை. எனவே கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து பெற்றோர்- ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பெற்றோர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

பெற்றோர் பொறுப்பேற்க வேண்டும்

விருத்தாசலம் சந்திரசேகர்: வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவன் பலி என தினந்தோறும் செய்தித்தாளில் செய்தி வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இதனை எல்லாம் பார்க்கும் பெற்றோர், அதை ஒரு செய்தியாக மட்டுமே பார்த்து கடந்து செல்கின்றனர். தங்களுக்கு நடக்கும் வரை கேள்விப்படுவது எல்லாம் செய்தியாக தான் இருக்கும். நடந்து விட்டால் தான் கவலை பிறக்கும். மாணவர்களுக்கு ஆர்வக்கோளாறால் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் அவர்களை பக்குவப்படுத்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். ஆனால் இன்று ஆசிரியர்கள், மாணவர்களை கண்டிக்க முடியாத நிலையில் உள்ளனர். அதனால் முழு பொறுப்பையும் பெற்றோர்களே, ஏற்க வேண்டும். மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிளை பள்ளி பருவத்தில் கொடுக்கக் கூடாது.

வெளியூர்களுக்கு சென்று படிக்க நேரிட்டால் அவர்களை பஸ்சிலோ அல்லது சைக்கிளிலோ சென்று வர அறிவுறுத்த வேண்டும். போலீசாரும் தங்களுக்கு என்ன என்று இல்லாமல் ஒவ்வொருவரும் சாகச பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை கண்டறிந்து கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் வருங்கால தூண்களாகிய இளம் பிள்ளைகளை நாமே நமது அலட்சியத்தால் இழக்கலாமா?. அதனால் பள்ளிகளில் சமூக ஆர்வலர்களை கொண்டு விழிப்புணர்வு கூட்டம் நடத்தி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

Similar News