குழந்தைகளை மிரட்டும் தட்டம்மை: உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன?
- தட்டமை பாதிப்பு குடிசைப்பகுதிகளில் தான் அதிகளவில் பரவி உள்ளது.
- சுகாதாரம், ஊட்டத்து விஷயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.
மும்பை பெருநகரம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நிலையில், குழந்தைகளை தட்டம்மை நோய் மிரட்டி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 வாரத்தில் மட்டும் மும்பை பெருநகரில் 5 வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
தற்போது இந்த நோய் நவிமும்பை, புனே, தானே பகுதிகளுக்கும் பரவி உள்ளது. மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 371 குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. மும்பையில் தட்டமை பாதிப்பு குடிசைப்பகுதிகளில் தான் அதிகளவில் பரவி உள்ளது. அங்குள்ள உள்ள குழந்தைகள் தடுப்பூசி போடாதது நோய் பரவலுக்கு காரணமாக கூறப்பட்டது. இந்தநிலையில் ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள் இடையே தட்டம்மை பரவ காரணமாக இருப்பதாக தெரியவந்து உள்ளது.
மும்பையில் நோய் பரவல் அதிகம் உள்ள சிவாஜிநகர் பகுதியில், கடந்த 2010-ம் ஆண்டு குப்பை சேகரிக்கும் மக்களின் 16 குழந்தைகள் ஊட்டத்துகுறைபாடு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநில தட்டம்மை தடுப்பு குழு தலைவர் டாக்டர் சுபாஷ் சலுங்கே கூறியதாவது:-
ஊட்டத்சத்து குறைபாடு உள்ள மற்றும் தடுப்பூசி போடாத குழந்தைகள் தட்டம்மையால் பாதிக்கப்படும் போது அதிக விளைவுகளை சந்திக்கின்றனர். ஊட்டச்சத்து உணவு கிடைக்காத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு கிரேடு-4 பிரச்சினையை சந்திக்கும் போது அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடிசைப்பகுதி குழந்தைகளுக்கு ஊட்டத்துகுறைபாடு ஏற்பட்டது குறித்து மூத்த குழந்தைகள் நல மருத்துவர் மிருதுளா பட்கே கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு உழைக்கும் வர்க்கத்தினர் இடையே கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அது அவர்களின் சுகாதாரம், ஊட்டத்து விஷயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. வேலையின்மை மற்றும் கையில் போதிய பணம் இல்லாத காரணத்தால் குடிசைப்பகுதி மக்களால் சரியாக சாப்பிட முடியாமல் போனது.
கொரோனா ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் விகிதத்தை அதிகரித்து உள்ளது. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் பார்க்க நன்றாக தெரிந்தாலும் அவர்களுக்கு இரும்பு, வைட்டமின் டி போன்ற சத்து குறைபாடுகள் உள்ளன. தடுப்பூசி போடாதது, ஊட்டசத்து குறைபாடு தான் தட்டம்மைக்கு அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணம். நல்ல ஊட்டச்சத்துள்ள குழந்தை கூட தட்டம்மை காரணமாக ஒரு வாரத்திற்கு மேல் சாப்பிடுவதை நிறுத்துகிறது.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு செல்லலாம். அந்தவகையில் ஊட்டச்சத்தின்மை அம்மை நோயின் சிக்கலாகும். இந்த நோய் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை மிகவும் கடுமையாக பாதிக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.