குழந்தை பராமரிப்பு

நல்ல நண்பர்களுடன் பழகுவோம்

Published On 2023-03-11 03:59 GMT   |   Update On 2023-03-11 03:59 GMT
  • நல்ல நட்பை அடையாளம் காண சில வழிகள் உண்டு.
  • கஷ்டம் வந்தபோது கை கொடுத்தால் அது நல்ல நட்பு.

நண்பர்களிலே நல்ல நண்பர் யார்? என்பது அனுபவத்தின் மூலம் தான் தெரியுமே தவிர, சாதாரணமாக கண்டுகொள்ள முடியாது. நல்ல நட்பை அடையாளம் காண சில வழிகள் உண்டு. உனக்கு கஷ்டம் வந்தபோது கை கொடுத்தால் அது நல்ல நட்பு. புறம்பேசி மகிழ்ந்தால் தீயநட்பு. நீ இல்லாத இடத்தில் உன்னைப் பற்றி தவறாக பேசும்போது, நல்ல நண்பன் அதை மறுத்து பேசுவான். அப்படிப்பட்டவர்களையே நாம் நல்ல நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நண்பர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசிய காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. இன்றைக்கு சக நண்பர்களோடு பேசுவதைவிட, கையில் இருக்கும் செல்போன் அல்லது கம்ப்யூட்டர் முன்னாடியே தங்கள் காலத்தை கழித்து விடுகிறார்கள். நண்பர்களிடம் நேரில் பேச முயற்சி எடுங்கள். நல்ல நட்பு அமைய, ஒருவரோடு ஒருவர் நேரில் பேசுவதைவிட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை. ஏனென்றால் நேரில் ஒருவருடன் பேசும்போது அவர் எப்படி பேசுகிறார். அவர் என்ன உணர்ச்சிகளை முகத்தில் காட்டுகிறார். அவருடைய சைகைகள் எப்படி இருக் கிறது? என எல்லா விஷயத்தை யும் கவனிக்க முடியும்.

ஆன்லைனில் தொடர்பு இருந்தால் மட்டும் உண்மையான நட்பு வளர்ந்து விடாது. நீங்களும் சரி உங்கள் நண்பரும் சரி ஒருவருக்கொருவர் அன்பு காட்டி, நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் நட்பு நிலைத்திருக்கும். நல்ல நட்புக்கு ஆதாரமாக இருக்கும் இந்த குணங்களை நீங்கள் ஆன்லைனில் காட்ட முடியுமா? யோசித்து பாருங்கள்.

தாய், தந்தையைவிட தன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே. தாய், தந்தையிடம் கூட ஆலோசனை செய்ய முடியாத பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவான தீர்வை பெறலாம். பெற்றோரது அன்பு, உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது.

நட்பு, தோழமை என்பது இருவர் இடையே அல்லது பலரிடம் ஏற்படும் ஒரு உன்னத உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி புரிந்துகொள்ளுதல், அனுசரித்தலை அடிப்படையாக கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை மறந்து இன்பத்திலும், துன்பத்திலும் தானாக முன்வந்து உணர்வுகளை பகிர்ந்துகொள்வார்கள்.

ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களைப் போல நண்பர் களையும், நல்ல நண்பர்கள், கெட்ட நண்பர்களையும் தெரிந்துகொள்ள லாம். நல்ல நண்பன் தனது நட்பை முதலில் தனது சிந்தனை, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் என்பன வற்றை வெளிப்படையாகவே வழங்குவான்.

புகைபிடித்தல், போதை பொருள், பாலியல் கொலை, கொள்ளை உள்ளிட்ட தீயநடத்தைகளை கொண்டவர்களை நட்பாக பெறக்கூடாது. அது போன்றவர்களிடம் விலகி இருக்க பெற்றோர்களும், நல்ல நண்பர்களும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். நம்மை சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று எப்படி நம்புவது நாம் விட்டு கொடுக்கும் போதும் மனதை திறந்து உள்ளதை சொல்ல முற்படும்போதும் மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்தி கொள்ள முற்படலாம். அவர்களிடம் எந்த சூழ்நிலையிலும் நெருங்காமல் இருப்பது நல்லது.

பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்துகொள்ளுதல்தான். எல்லாரும் நல்லவரே என்பது நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒரு விதத்தில் வெகுளித்தனம்தான். நண்பன் நல்லவனா என்பதை ஆராய்ந்துதான் நட்பு கொள்ள வேண்டும். நல்ல நண்பர்களோடு பழகுவோம். நட்புடன் வளர்வோம்.

Similar News