குழந்தை பராமரிப்பு

குழந்தைகளின் பார்வை குறைபாட்டை தவிர்க்க என்னென்ன பயிற்சி அளிக்கலாம்?

Published On 2023-03-17 07:28 GMT   |   Update On 2023-03-17 07:28 GMT
  • கண்ணில் உள்ள தசைகளை வலுப்படுத்த கண்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம்.
  • தினமும் காலை சூரிய உதயத்தின் போதும், மாலையில் சூரிய அஸ்தமனத்தின் போதும் கண் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

இன்றைய சூழலில் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகிஉள்ளது. தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக குழந்தைகள் அமரும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கண்ணில் உள்ள தசைகளை வலுப்படுத்த கண்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம். அதாவது கண்களை அடிக்கடி நன்றாக சிமிட்டுமாறு குழந்தைகளை சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கண்களுக்கு நல்ல ஈரப்பசை கிடைத்து, கண் எரிச்சலும், அரிப்பும் ஏற்படாது.

மேலும் பார்வை திறனை அதிகரிக்க வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல சில முறை பயிற்சி செய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்சினை சிறிது சிறிதாக குறைந்து விடும். தினமும் காலை சூரிய உதயத்தின் போதும், மாலையில் சூரிய அஸ்தமனத்தின் போதும் கண் பயிற்சிகளை செய்ய வேண்டும். கண் கருவிழிகளை மட்டும் இடமிருந்து வலமாக சுற்றுதல், பின்னர் வலமிருந்து இடமாக சுற்றுதல், கருவிழிகளை மேலும் கீழும் பார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகளின் மூலம் ஒருவர் தெளிவாகவும், கவனமாகவும் பார்க்க முடியும். மேலும் கண் மருத்துவர், குழந்தைகளின் பார்வை திறனுக்கு தக்கவாறு, தேவையான கண் பயிற்சிகளையும் பரிந்துரை செய்வார்.

பார்வைக் குறைபாட்டைத் தடுக்க…

# ஒவ்வொரு குழந்தையையும் பள்ளியில் சேர்க்கும் முன் மற்றும் வருடம் ஒரு முறை என முழுக் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

# குழந்தைகளுக்கு வைட்டமின் சத்துள்ள உணவுப் பொருட்களான கேரட், கீரை வகைகள், காய்கறிகள், பப்பாளி, மீன், பால், முட்டை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.

# குழந்தைகள் படிக்கும் இடத்தில் வெளிச்சம் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

# குழந்தைகளுக்குக் கண்ணில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாகக் கண் மருத்துவரை அணுக வேண்டும். அதை விடுத்து நாமாகவே வைத்தியம் செய்யக் கூடாது.

# வீடியோ கேம், செல்போன் விளையாட்டுகள் போன்றவற்றை விளையாடுவதிலிருந்து குழந்தைகளைத் தடுத்து, டென்னிஸ், பாட்மிண்டன் போன்ற இதர மைதான விளையாட்டுகளில் அவர்களைக் கவனம்செலுத்த வைக்க வேண்டும்.

Similar News