குழந்தை பராமரிப்பு

குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உடற்பயிற்சி

Published On 2025-05-30 09:02 IST   |   Update On 2025-05-30 09:02:00 IST
  • உடற்பயிற்சி உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.
  • வீட்டு பணிகளான சுத்தம் செய்தல், துடைத்தல், போன்ற வேலைகளை குழந்தைகள் செய்வது ஒரு நல்ல உடற்பயிற்சி.

இன்றைய வாழ்க்கை சூழலில் உடற்பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உடற்பயிற்சி பெரியவர்களுக்கு மட்டும் அல்ல குழந்தைகளுக்கும் அவசியமானதாக கருதப்படுகிறது.

உடற்பயிற்சி உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து இருப்பதால் உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்து சிறு வயதிலேயே உடல் பருமன் உண்டாகிறது. இவற்றை தடுக்க குழந்தைகள் செய்ய வேண்டிய எளிமையான உடற்பயிற்சிகளை பற்றி அறிந்து கொள்வோம்.

நடைப்பயிற்சி

வீட்டில் மாடி இருந்தால் தினமும் 10-15 நிமிடம் வரை படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம். இல்லையென்றால் வீட்டின் அருகே நடக்கலாம். வாய்ப்பு இருப்பின் வீட்டிற்கு அருகே உள்ள பூங்காக்களில் நடப்பது சிறந்த உடற்பயிற்சி ஆகும். இவ்வாறு செய்வது குழந்தைகளின் உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையாக வெளியேறுகிறது. இதயத்துடிப்பு சீராகிறது.

சிலம்பு பயிற்சி

கம்புகளை வைத்து செய்கிற சிலம்பு பயிற்சியும் சிறந்த உடற்பயிற்சியாகும். இது தற்காப்பு கலைகளுள் ஒன்று. இதை தினமும் செய்வதால் குழந்தைகளின் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் சிலம்பாட்டம் உதவி புரியும்.

யோகா

தினமும் இருபது நிமிடங்கள் யோகா செய்வது குழந்தைகளுக்கு நல்லது. பல யோகாசனங்கள் இருக்கின்றன. அவற்றில் அடிப்படையான ஆசனங்களான பிராணாயாமம், சூரிய நமஸ்காரம் ஆகிய வற்றை செய்வது சிறப்பானது. யோகா செய்வது குழந்தைகளின் மனதை அமைதியாக்குகிறது. சிந்தனைகளை ஒருநிலைப்படுத்துகிறது.

 

வீட்டு பணிகளை செய்வது

வீட்டு பணிகளான சுத்தம் செய்தல், துடைத்தல், போன்ற வேலைகளை குழந்தைகள் செய்வது ஒரு நல்ல உடற்பயிற்சி ஆகும். இந்த வேலைகளை செய்வதால் நாம் குனிந்து நிமிருகிறோம். அதேபோல வீட்டில் கலைந்துள்ள பொருட்களை அழகாக அடுக்கி வைப்பதும் ஒரு உடற்பயிற்சி தான்.

நடனம் ஆடுவது

வீட்டில் நடனம் ஆடுவது சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது. பெற்றோர்கள் நடன அசைவுகளை கற்றுக்கொடுத்து குழந்தைகளை ஆட சொல்லலாம். இது உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும். ஆப்பிரிக்க நாடுகளிலும், மற்ற வெளிநாடுகளிலும் வீட்டில் நடனம் ஆடுவதை உடற்பயிற்சியாக செய்து வருகின்றனர்.

கயிறு வைத்து குதிப்பது

ஸ்கிப்பிங் எனப்படும் கயிறு வைத்து குதித்து விளையாடும் பயிற்சியை குழந்தைகள் தினமும் செய்வது அவர்களின் பாதங்களையும், உடல் உறுப்புகளையும் சீராக வைத்திருக்க உதவி புரியும். இதை தினமும் செய்வதால் உடல் எடை அதிகரிக்காமலும், உடல் தசைகள் வலிமையாகவும் இருக்கும்.

Tags:    

Similar News