லைஃப்ஸ்டைல்

பிள்ளைகளின் பள்ளிக்கல்வியில் மாற்றம் தேவை...

Published On 2019-04-10 03:00 GMT   |   Update On 2019-04-10 03:00 GMT
இந்திய நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி. பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் நம் குழந்தைகள் வெற்றிபெற வேண்டும்.
இளைஞர்கள் நிறைந்த இந்திய நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி. பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் நம் குழந்தைகள் வெற்றிபெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஐ.எஸ்.ஏ. என்ற அமைப்பு உலக அளவில் பள்ளிக்கல்வியைப் பற்றிய ஓர் ஆய்வு நடத்தி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்கள்.

73 நாடுகள் பங்கேற்ற அந்த ஆய்வில் நம் நாட்டின் தரவரிசை 72 ஆக இருந்தது. ஆகவே, பள்ளிக்கல்வியிலே நாம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண வேண்டும். தரத்தையும் உயர்த்த வேண்டும். மாணவர்களின் இடைநிற்றல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் சுமார் 15 லட்சம் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

உலகிலேயே பள்ளிகளின் அதிக எண்ணிக்கை இது தான். இதிலே சுமார் 75 சதவீதம் அரசுப்பள்ளிகள், மற்றவை தனியார் பள்ளிகள். அரசுப்பள்ளிகளின் வெற்றிதான் நம் நாட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை முடிவு செய்யும். இதில் 3-ல் ஒரு பகுதி பள்ளிகளில் 50 மாணவர்களுக்கும் குறைவாகவே படிக்கிறார்கள். அங்கே சராசரியாக இருக்க வேண்டிய எண்ணிக்கையைவிட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். மற்ற பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களை அமர்த்துவது இல்லை.

பள்ளிக்கல்வியின் தர வரிசையில் உலகின் முதல் இடத்தில் இருப்பது தென்கொரியா. அந்த நாட்டில் ஆசிரியர்களுடைய தகுதியே மிக உயர்வானது. ஆசிரியர்களின் ஊதியம், அவர்கள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் மதிப்பு அனைத்துமே வியக்கத்தக்கவை. ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்களாக விண்ணப்பித்த எண்ணிக்கையில் சுமார் 5 சதவீதம் பேர்தான் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 4 ஆண்டுகள் கடுமையான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சிக்கு பின்னர்தான் அவர்கள் ஆசிரியர்களாக அமர்த்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் அதிகமான வேறுபாடுகள் இல்லை. இரண்டு தரப்புக்குமே அரசாங்க நிதியுதவி கிடைக்கிறது. சில பெற்றோர்களுக்கு அரசு நேரடியாக நிதியுதவியும் செய்கிறது. அவர்களுடைய வேலை நாட்களும், வேலை நேரமும் நம் நாட்டைவிட மிக அதிகம்.

ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குழந்தைகள் பள்ளியிலேயே இருப்பார்கள். பாதி நேரம் பொதுவான வகுப்புகளும் மீதி நேரம் தனி பயிற்சியும் நடக்கிறது. நம் நாட்டில் ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படுவது இல்லை. அதிலே ஒரு பகுதியினர்; பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே சான்றிதழ் பெறக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

இது அரசுகளுக்கு தெரிந்தே நடக்கிறது. ஆசிரியர்களை அரசு வேலைக்கு அமர்த்துவது எல்லா நேரங்களிலும் தகுதியை மட்டுமே வைத்து அமர்த்துவது இல்லை. ஆசிரியர் ஆவதற்கு பணச்செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிபட்டவர்கள் பள்ளியில் சேர்ந்த பின்னால் வேறு ஏதாவது தொழில் செய்து பணத்தை ஈட்ட முனைகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

அரசுப் பள்ளிகளைப் பற்றிய ஓர் ஆய்வில், ஆசிரியர்கள் சுமார் பாதிபேர் வேலைக்கு வருவது இல்லை என்று தெரியவருகிறது. மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனாலும் அரசின் கொள்கை முடிவுப்படி 8-ம் வகுப்பு வரை எல்லா மாணவர்களும் மேல் வகுப்பிற்கு தகுதி பெற்றுவிடுகிறார்கள். இந்த முடிவு கல்வித்தரத்தையே கேள்வி குறியாக்கிவிட்டது. அமெரிக்க நாட்டில் அரசுப்பள்ளிகளை உள்ளாட்சிகள் நடத்துகின்றன. எந்தப் பள்ளி சிறப்பாக நடைபெறுகிறதோ அந்த பகுதிக்கு மக்கள் அதிகமாக குடியேறுகிறார்கள். அவர்கள் மூலம் அந்த உள்ளாட்சிக்கு வரித்தொகை அதிகமாக கிடைக்கிறது. இதன்விளைவாக உள்ளாட்சிகள் தங்களுக்குள் போட்டிபோட்டு பள்ளிகளை திறமையாக நடத்தி தரத்தை உயர்த்துகின்றனர்.

இன்னொருபுறம் ஒரு புதுமையாக சார்ட்டர் பள்ளிகள் என்று ஒன்றை அறிமுகப்படுத்தி, ஆசிரியர்களின் மாத ஊதியத்தை மாநில அரசுகள் கொடுக்கும். ஆனால் நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இதுபோன்ற சார்ட்டர் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக வளர்ந்து வருகின்றன. நம் நாட்டிலும் அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் தருணம் வந்துவிட்டது. அரசு அலுவலர்களும் மற்றும் அரசு ஊழியர்களும் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புவது என்று முடிவு எடுத்தால் அரசின் கவனம் அரசு பள்ளிகளின் பக்கம் திரும்பும்.

ஆசிரியர்களின் பயிற்சி முறையை இன்னும் பலப்படுத்த வேண்டும், கடுமையாக்க வேண்டும். அரசில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதியை மட்டுமே அடிப்படையாக வைத்து தேர்வு செய்ய வேண்டும். பணி நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு இந்த மூன்றிலேயும் ஊழல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அரசுப்பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குறையில்லாமல் செய்து தர வேண்டும். திறமையான நிர்வாகத்திற்கு புதிதாக வழிவகை செய்ய வேண்டும்.

தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு எந்த உதவியும் செய்வது இல்லை. 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி என்று சட்டம் இயற்றி இருந்தாலும் தனியார் பள்ளிக்கு இது பொருந்தாது. 14-லிருந்து 18 வயது வரை உயர்த்தப்பட வேண்டும். தனியார் பள்ளிக்கும், அங்கு படிக்கும் குழந்தைக்கும் அரசு உதவி செய்ய வேண்டும். தற்போது நம் நாட்டில் பல்வேறு அனுமதிகள் பெறுவதற்காக பள்ளிகள் நிறைய பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கிறது. இது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.

இதன் மூலம் கல்விச் செலவைக் குறைக்கலாம். தனியார் பள்ளிகளில் தகுதி உடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவது இல்லை. இதை மாற்றுவதற்கு மாநில அரசுகள் தனியார் நிர்வாகங்களுடன் கலந்து பேசி ஆவன செய்ய வேண்டும். பள்ளிக்கல்வியில் உலக அளவில் சிறந்து விளங்கும் தென்கொரியா மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு நம்முடைய குழுக்களை அனுப்பி அவர்களுடைய அனுபவத்தை கண்டறிந்து நாம் கடைபிடிக்க வேண்டும்.

பின்லாந்து நாட்டைப்போல் கல்விக் கொள்கையை போல் நிரந்தர நிலை ஏற்படுத்துவதற்காக அரசும், எதிர்க்கட்சியும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். மக்களாட்சி மாண்புற வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் காண வேண்டுமானால் கல்விக்கு அதிகமான தொகையை செலவழித்து வளர்ந்த நாடுகளுடன் நாமும் போட்டிபோட வேண்டும். அப்போது நமது எதிர்காலம் சிறப்பாக அமையும்.

ஜி.விஸ்வநாதன் வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்
Tags:    

Similar News